“அதிமுகவுடன் அமமுக இணைப்பு?” என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?
முன்னாள் அமைச்சர்கள் பலர் ஆளுங்கட்சியை நோக்கிப் போவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாகக் கட்சியால் பல்வேறு பலன்களைப் பெற்றவர்கள், இன்றைக்குத் தேர்தல் தோல்வி அடைந்தவுடன் கட்சி மாறுவது நியாயமற்றது. தோல்விக்குக் கட்சி மட்டுமே பொறுப்பல்ல, அங்கே அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்த அவர்களுக்கும் அதில் பொறுப்பு உள்ளது.
சென்னை, ஜுன் 11: தமிழக அரசியல் களத்தில் அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகப் பரவலான பேச்சுகள் எழுந்து வரும் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து சென்னை அடையாரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி தர்மம் மற்றும் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்ததன் செயல்பாடு குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக அதிமுக, அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சியை நோக்கி மாறுவது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: “திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட்”.. வீரபாண்டியன் அறிவிப்பு
அதிமுக – அமமுக இணைப்பு?
இந்தக் கடினமான நேரத்திலும் நான் அதிமுகவிற்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறேன். இதனால் இரு கட்சிகளும் ஒரே கட்சியாக இணைந்துதான் ஆக வேண்டும் என்கிற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக வெளியில் இருப்பவர்கள் நினைக்கலாம். ஆனால், எங்கள் கட்சியைப் பொறுத்தவரை எந்தவொரு தலைமைக்கழக நிர்வாகியோ அல்லது மாவட்ட செயலாளர்களோ அதிமுகவுடன் இணைய வேண்டும் என்று என்னிடம் பேசவும் இல்லை, அத்தகைய கோரிக்கையை வைக்கவும் இல்லை என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு, அமமுக ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், அதிமுகவின் தற்போதைய சோதனை காலம் குறித்து எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டு பேசினீர்களா என்ற கேள்விக்கு, “தேவை ஏற்படும் போது அவரோடு பேசிவிடுவேன்” என்றும் பதிலளித்தார்.
தவெக அலுவலக வாசலில் நின்றது பரிதாபம்:
சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலக தவெக நோக்கிச் சென்ற நிர்வாகிகளின் நிலை குறித்துப் பேசிய அவர், “அவர்கள் சென்ற விதம் மிகவும் பரிதாபமாக இருந்தது. காலை 10 மணிக்கு அப்பாயின்ட்மெண்ட் என்று கூறிவிட்டு, அங்கே சென்றபோது தவெக அலுவலகத்தின் கேட் கூட திறக்காத அளவுக்கு இருந்த இடத்தை நோக்கி இவர்கள் சென்றது வேதனையானது” என்று விமர்சித்தார். கட்சி மாறிச் செல்பவர்களுக்காக நாங்கள் வருத்தப்படத்தான் முடியும். எங்களுடைய இயக்கம் இது போன்ற கட்சி தாவிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல; என்னோடு இறுதிவரை பயணிக்கிற உண்மைத் தொண்டர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.
கட்சி மாறுவது புதிய விஷயம் அல்ல:
முன்னாள் அமைச்சர்கள் பலர் ஆளுங்கட்சியை நோக்கிப் போவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாகக் கட்சியால் பல்வேறு பலன்களைப் பெற்றவர்கள், இன்றைக்குத் தேர்தல் தோல்வி அடைந்தவுடன் கட்சி மாறுவது நியாயமற்றது. தோல்விக்குக் கட்சி மட்டுமே பொறுப்பல்ல, அங்கே அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்த அவர்களுக்கும் அதில் பொறுப்பு உள்ளது. அவர்கள் ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம்; ஆனால் எந்தக் காரணமாக இருந்தாலும் கட்சியில் இருந்துகொண்டே அதனைத் சரிசெய்வதற்கோ அல்லது நிவர்த்தி செய்வதற்கோ கட்சித் தலைமையிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிக்க: “தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்; சிபிஐ-யின் முடிவை ஏற்கத்தான் வேண்டும்”.. ப.சிதம்பரம் அதிரடி!
அதிமுக கூண்டோடு கலையவில்லை:
அதிமுகவின் தற்போதைய பலவீனமான சூழல் மற்றும் அரசியல் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், “அதிமுக ஒன்றும் கூண்டோடு கலையவில்லை” என்று கூறினார். தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்துக் கட்சித் தலைமையிடம் பேசுவதுதான் கடந்த காலத்தில் நாம் பார்த்த நடைமுறை என்றும், ஆனால் தற்போது சிலர் தங்களது சொந்தக் காரணங்களுக்காகவும், சீட் கிடைக்காத அதிருப்தியினாலும் மட்டுமே கட்சி மாறுகிறார்கள் என்றும் விளக்கமளித்தார்.