கரூரில் அதிரடி.. புகழூர் நகராட்சி அலுவலகத்தை அலறவிட்ட லஞ்ச ஒழிப்பு படை.. கணக்கில் வராத பணம் சிக்கியது!
Karur Municipal Office Anti Corruption Raid : கரூர் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வரதா ரூ.57 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டம், புகழூர் பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தினம் தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களிடம், நகராட்சி அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக, கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்துக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் நேற்று சனிக்கிழமை ( ஜூலை 25- ஆம் தேதி) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகத்தின் உள்ளே அதிரடியாக நுழைந்த ஊழல் தடுப்பு போலீசார் அங்கிருந்த பொது மக்களை உடனடியாக வெளியேற்றி அலுவலகத்தின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றை மூடினர்.
கணக்கில் வராத ரூ.57 ஆயிரம் பறிமுதல்
இதைத் தொடர்ந்து, அலுவலர்களின் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அலுவலகத்தில் உள்ள மேஜைகள் உள்ளிட்டவற்றில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ.57 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இதில், புகழூர் நகராட்சி ஆணையர் வெங்கடாசலபதி மற்றும் 5- க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: “காவிரி உரிமை அரசியல் அல்ல; தமிழ்நாட்டின் வாழ்வுரிமை!”.. மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!




நகராட்சி ஆணையர்-அலுவலரிடம் விசாரணை
இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது அந்த அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தொடர் லஞ்ச ஒழிப்பு சோதனை
அந்த வகையில், தமிழகத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சார் பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர். இதில், லட்சக்கணக்கான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், லஞ்சம் பெற்றதாக பல்வேறு அரசு ஊழியர்கள் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வீடு புகுந்து பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் – காதலிக்க மறுத்ததால் விபரீதம்