“திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட்”.. வீரபாண்டியன் அறிவிப்பு
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார். தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை உள்ளதாக கூறியுள்ளார். அக்கட்சி சார்பில் கடந்த 2 நாட்களாக நடத்திய ஆலோசனையை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜுன் 11: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார். தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை உள்ளதாக கூறியுள்ளார். அக்கட்சி சார்பில் கடந்த 2 நாட்களாக நடத்திய ஆலோசனையை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அரசியல் கூட்டணிகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதையும் படிக்க: “சிங்கப்பெண் படைக்கு துப்பாக்கி”.. நாள்தோறும் 2 ஷிப்ட் முறையில் ரோந்துப் பணி!!
இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநில செயலாளர் மூ. வீரபாண்டியன் இந்த முக்கிய முடிவை அறிவித்தார்.
அரசியல் குழப்பமும் சிபிஐ-யின் நிலைப்பாடும்:
இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மூ.வீரபாண்டியன், “தற்போது தமிழக அரசியலில் ஒரு குழப்பமான சூழல் நிலவுகிறது. எங்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூடி விரிவாக விவாதித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். இன்றைய அரசியல் சூழலில் காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் இருக்கும் இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அணி சேர்க்கையில் இடம்பெறுவதற்கான சூழல் கனிந்து வரவில்லை” என்று விளக்கமளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “பல்வேறு பரபரப்பான வார்த்தைகளைத் தேடுவதைக் காட்டிலும், தமிழில் அழுத்தமான மற்றும் மென்மையான அரசியல் நயத்துடன் நான் கூறுகிறேன்; இன்றுள்ள சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற இயலாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
எதிர்காலத் தேர்தல் மற்றும் கூட்டணி வியூகம்:
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த போதிலும், தங்களின் முதன்மை அரசியல் எதிரி யார் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். “எங்களுக்கான முதன்மை அரசியல் பகை முரண் கொண்ட இயக்கம் பாஜக தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. வரும் காலங்களில் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும் போது, அந்தந்த காலகட்டத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ப கட்சி கூடி உரிய முடிவுகளை எடுக்கும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “நாங்கள் எப்போதும் ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளை விடுத்துத் தனித்துச் செல்ல மாட்டோம். இடதுசாரிகளுடன் அணிசேரும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து, நாட்டின் பொது நலனுக்காகவும் மக்களின் கோரிக்கைகளுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம்” என்றும் அவர் தனது பேட்டியில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
இதையும் படிக்க: “21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது”.. மனமகிழ் மன்றம், மதுபார்களுக்கு அரசு கட்டுப்பாடு!!
திமுகவுக்கு விழுந்த பலத்த அடி:
மத்திய கமிட்டியின் வழிகாட்டுதலின்படி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகளை ஜனநாயக சக்திகளாகவே சிபிஐ மதிப்பீடு செய்கிறது என்றும் கூறினார். தமிழ்நாட்டின் முக்கிய இடதுசாரி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் களம் ஆகியவற்றில் புதிய கூட்டணி மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.