V. Senthil Balaji Tamil Nadu Election: கட்சி மாற்றம்.. சிறைவாசம்.. தொடர் வெற்றியை வசமாக்குவாரா செந்தில்பாலாஜி?
Tamil Nadu Elections 2026: அதிமுகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வே. செந்தில் பாலாஜி தற்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கட்சி பணி ஆற்றி வருகிறார். வருகிற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் களமிறங்க உள்ளதாகவும், வேறு தொகு மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக மற்றும் திமுகவில் முன்னாள் அமைச்சராகவும், தற்போதைய கரூர் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவும் இருந்து வருபவர் வே. செந்தில் பாலாஜி. இவர் கடந்த 1975- ஆம் ஆண்டு அக்டோபர் 21- ஆம் தேதி வேலுசாமி கவுண்டர்- பழனியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்த செந்தில் பாலாஜி அரசியல் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக 2003- ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்ததுடன் 1997- ஆம் ஆண்டு தனது 21- ஆவது வயதில் உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 2006 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாகி சட்டமன்றத்தில் காலடி பதித்தார். பின்னர், கட்சியில் முக்கியமான நபராக வளர்ந்த செந்தில் பாலாஜி 2011- ஆம் ஆண்டு முதல் 2015- ஆம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக பணிபுரிந்தார். மாவட்ட செயலாளர் பதவிகளையும் பெற்றுள்ளார்.
திமுகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்
பின்னர், சில காரணங்களால், 2015- ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பு மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்யப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு பின்னர் டிடிவி தினகரனின் ஆதரவாளராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்தார். பின்னர், அவரிடம் இருந்து விலகி கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் 14- ஆம் தேதி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, கரூர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி 2019- இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 4- ஆவது முறையாக எம்எல்ஏவாக தேர்வானார்.
மேலும் படிக்க: காங்கிரஸ் இஃப்தார் நிகழ்ச்சியில் ‘சீட்’ அரசியல் – பதில் சொல்லாமல் நழுவிய செல்வப்பெருந்தகை




சிறைவாசத்தால் அமைச்சர் பதவியை இழந்த செந்தில் பாலாஜி
இதைத்தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி எம்எல்ஏவாக தேர்வாகி திமுக அரசின் மின்சாரம் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர். கடந்த 2024- ஆம் ஆண்டு பண மோசடி வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2025- இல் ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்ற தொகுதியில் 2006- ஆம் ஆண்டு அதிமுக சார்பில் களமிறங்கிய செந்தில் பாலாஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வாசுகி முருகேசனை 47 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர் வெற்றி
இதன் பின்னர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம். ஆர். விஜயபாஸ்கரை 49.31% வாக்குகள் பெற்று வெற்றியை மீண்டும் நிலை நிறுத்தினார். கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர் வெற்றியை செந்தில்பாலாஜி தனதாக்கி வருகிறார். இதில், 2016-இல் அதிமுக சார்பிலும், 2019-இல் திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் மாறி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதே போல, வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வெற்றி வாய்ப்புள்ள 28 தொகுதிகள் எவை?.. காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட பார்வையாளர்கள் ஆலோசனை..