இப்போதான் பஞ்சாயத்து முடிஞ்சுது.. அதுக்குள்ளேயா.. திமுக-காங்கிரஸ் இடையே வெடித்தது மோதல்… கட்சியினர் அதிர்ச்சி!
DMK And Congress Conflict: தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு பிரச்சனை ஒரு வழியாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது, புதுச்சேரி மாநிலத்தில் இரு கட்சிகளிடையே கூட்டணிக்கு தலைமை தாங்குவது தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது.
தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடிவடைந்துள்ள நிலையில், தற்போது, புதுச்சேரி மாநிலத்தில் திமுக காங்கிரஸ் இடையை உரசல் தொடங்கியுள்ளது. இது, இரு கட்சிகள் இடையே கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடருமா அல்லது அந்த கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்குமா என்ற பரபரப்பு நிலவி வந்தது. இதனிடையே, காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இடையே நடைபெற்ற வாக்குவாதமும் பல்வேறு வதந்திகளுக்கு வழி வகுத்தது. இறுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் திமுக தலைமையிடமிருந்து 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சி பெற்றுக் கொண்டதுடன் அந்த கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்துள்ளது.
திமுக-காங்கிரஸ் இடையே வெடித்த மோதல்
அவ்வாறு தமிழகத்தில் ஒரு வழியாக இரு கட்சிகளுக்கு இடையேயான சிக்கல் தீர்ந்துள்ள நிலையில், தற்போது புதுச்சேரி மாநிலத்தில் திமுக காங்கிரஸ் இடையே மிகப் பெரிய பிரச்சனை வெடித்துள்ளது. தற்போது வரை திமுக -காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தான் தலைமை பொறுப்பை வகித்து வந்தது. அதன்படியே, இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியானது அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வந்த நிலையில், முதல் அமைச்சர் பதவியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு, திமுகவே தலைமை தாங்கும் என்ற கருத்து அந்த கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..




காங்கிரஸை விட அதிக வாக்கு சதவீதம் பெற்ற திமுக
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 14 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களிலும், திமுக 13 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களிலும் வெற்றி பெற்றதோடு, காங்கிரசை விட, திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தை பெற்றிருந்தது. மேலும், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியிருந்தது. மேற்கண்ட காரணங்களால் வருகிற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதனிடையே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை வகிக்கும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.
கூட்டணி கட்சிகளிடம் திமுக தனியாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
இந்த நிலையில், கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தங்களது அலுவலகத்துக்கு வந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரு கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, இந்த இரு கட்சிகளிடம் திமுக தனியாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிரச்சனை தீர்ந்துள்ள நிலையில், புதுச்சேரியில் பிரச்சனை உருவாகியுள்ளது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ரீசன்டா சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்கு…. விவாகரத்து விவகாரம் குறித்து பேசிய விஜய்?