தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு.. திருப்பத்தூர் எம்எல்ஏ பங்கேற்க திடீர் சிக்கல்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு!
Tirupattur Mla Srinivasa Sethupathi : தமிழக வெற்றிக் கழக அரசு நாளை புதன்கிழமை பெரும்பான்மை நிரூபிக்க இருக்கும் நிலையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி த.வெ.க. எம்எல்ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தோல்வியை தழுவி இருந்தார். இதில் தபால் வாக்கை வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், தபால் வாக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏவுக்கு நீதிமன்றம் திடீர் தடை
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு நாளை புதன்கிழமை ( மே 13- ஆம் தேதி) சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கு திருப்பத்தூர் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறுவது கற்பனையானது என்று தங்களது தரப்பு விவாதத்தை முன் வைத்தார்.
நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம்
இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆஜராகி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி தபால் வாக்கு மாறி வந்ததாக கூறியுள்ளார் என்று எதிர் தரப்பு வாதத்தை முன் வைத்தார். இதனை கேட்ட நீதிபதி விக்டோரியா நாளை நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 375 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் 83 ஆயிரத்து 374 வாக்குகள் பெற்றிருந்தார்.
எம்எல்ஏ-வாக பதவி ஏற்பதற்கு இடைக்கால தடை
இவர்களுக்கு இடையே 1 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் ஆகும். இதில், குளறுபடி ஏற்பட்டதாக கூறிய கே. ஆர். பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதன் காரணமாகவே தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.