தெருக்கள், சாலைகளுக்கு சாதி பெயர்கள்.. தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம்..
இந்தத் தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கை எந்த நீதிபதி அல்லது அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை தலைமை நீதிபதி சீஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 11, 2026: தமிழ்நாட்டில் தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. ஒரு ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்தினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், “பள்ளர் தெரு” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை நீதிபதி ரமேஷ் கவனித்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு பெயரிடும்போது சாதியைக் குறிக்கும் பெயர்களைத் தவிர்க்க வேண்டும் என 1978ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அரசாணைகளும், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது வரை “பள்ளர் தெரு” போன்ற பெயர்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து நீதிபதி வேதனை தெரிவித்தார்.
சாதிகளின் அடிப்படியில் இருக்கும் தெருக்களின் பெயர்:
மேலும், ஒரு தெரு அல்லது சாலைக்கு ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரைச் சூட்டுவதால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படுகின்றன என நீதிபதி குறிப்பிட்டார். இதுபோன்ற பெயர்களால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவர்களின் சாதியின் அடிப்படையில் அடையாளம் காணப்படும் நிலை ஏற்படுகிறது என்றும், அந்தப் பெயர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரத சக்கரவர்த்தி சமீபத்தில் உத்தரவிட்டிருந்ததையும் நீதிபதி ரமேஷ் சுட்டிக்காட்டினார்.
தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த நீதிபதி:
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயர் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளையும் குறிப்பிட்ட நீதிபதி, தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் முழுமையாக நீக்கப்படாவிட்டால், இதுபோன்ற முயற்சிகள் முழுமையடையாது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, ஜாமீன் மனுவை பரிசீலித்த பின்னர், தெருக்கள் மற்றும் சாலைகளில் இருந்து சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக நீதிபதி ரமேஷ் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார்.
மேலும் படிக்க: வளர்ப்பு நாய்களைத் தெருவில் விடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..
இந்தத் தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கை எந்த நீதிபதி அல்லது அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை தலைமை நீதிபதி சீஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், தமிழகத்தில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை முழுமையாக நீக்குவதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.