திடீரென தள்ளிப்போன ‘கிட்டி’ பட ரிலீஸ்.. ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ காரணமா?.. தயாரிப்பாளர் விளக்கம்!
Gitti Movie Release Date Postponed: அசோக்குமார் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள 'கிட்டி' திரைப்படம் அக்டோபர் 2-க்கு பதிலாக அக்டோபர் 9-ஆம் தேதி திரைக்கு வரும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' வெளியாவதால் ரிலீஸ் தள்ளிப்போகவில்லை என்றும், கூடுதல் திரையரங்குகள் கிடைக்கவே தேதியை மாற்றியதாகவும் தயாரிப்பாளர் ஜெய் விளக்கமளித்துள்ளார்.
சேலம், செப்.29: தமிழ் திரை உலகில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் திரைப்படங்கள் தங்களுக்குப் போதுமான திரையரங்குகளைப் பெறுவதிலும், பார்வையாளர்களைச் சென்றடைவதிலும் கடும் போட்டியைச் சந்தித்து வருகின்றன. அந்த வகையில், புதுமையான கதைக் களத்துடன் தயாராகியுள்ள ‘கிட்டி’ திரைப்படம் முதலில் அக்டோபர் 2-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அக்டோபர் 9-ஆம் தேதி பிரம்மாண்டமாகப் திரைக்கு வரவுள்ளது. திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் மற்றும் கதைக்களம் குறித்துப் படக்குழுவினர் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர்.
சேலத்தில் கிட்டி படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு:
சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ‘கிட்டி’ திரைப்படக் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர் நெடுமாறன், தயாரிப்பாளர் ஜெய், விநியோகஸ்தர் விஷ்ணு பிரியா உள்ளிட்ட முக்கியப் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தில் அசோக்குமார் பாலகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகைகள் நிஷா, சங்கவி மற்றும் விஷ்ணு பிரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மூன்று கதாநாயகிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
