“தோட்டங்களில் உலா வரும் ஒற்றை யானை!”.. கோவை அருகே கம்பீர நடை.. வைரலாகும் CCTV காட்சிகள்!
Wild Elephant Strolls Near Coimbatore: கோவை பூண்டி சுற்றியுள்ள கிராமங்களில் உணவிற்காக நள்ளிரவில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. தென்னை மற்றும் வாழை மரங்களைச் சேதப்படுத்திய யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
கோவை, செப்.28: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில், உணவிற்காகவும் தண்ணீருக்காகவும் வனவிலங்குகள் குறிப்பாகக் காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பூண்டி, முட்டத்துவயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று சுதந்திரமாக உலா வரும் சூழல் உருவாகியுள்ளது. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நாளுக்கு நாள் அச்சமும் கவலையும் அதிகரித்து வருகிறது.
நள்ளிரவில் புகுந்து சேதப்படுத்திய ஒற்றை யானை:
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று, முட்டத்துவயல் அருகே அமைந்துள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் நுழைந்துள்ளது. அங்குப் பயிரிடப்பட்டிருந்த தென்னை மற்றும் வாழை மரங்களை உண்டு சேதப்படுத்திய அந்த யானை, தோட்டத்திற்குள் எவ்வித பயமுமின்றி சாவகாசமாக உலா வந்துள்ளது. நள்ளிரவில் அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
