கூட்டணி ஆதரவின்றி திமுகவால் 10 தொகுதி ஜெயிக்க முடியுமா? மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா காட்டம்!
Minister Aadav Arjuna Speech : கூட்டணி கட்சிகள் இன்றி திமுக 10 தொகுதிகளில் வெற்றி பெற்று காண்பிக்க முடியுமா என்றும், தவெக 150 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சி முறை தொடரும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று வியாழக்கிழமை பரப்புரை மேற்கொண்டனர். இதில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். கூட்டத்தில், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பேசுகையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதற்காக தவெக சார்பில் சோபா கொடுத்தோம் என்று கூறுகின்றனர். ஆம், ஐயூஎம்எல் 60 ஆண்டு கால அமைச்சரவையில் கால் மேல் கால் போட்டு அமைச்சராக அமர்வதற்காக ஷோபா கொடுத்தோம். 60 ஆண்டுகளாக உங்கள் குடும்பத்தினர் மட்டும்தான் இருக்க வேண்டுமா. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த வன்னி அரசு அமைச்சராக கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.
இடைத்தேர்தலில் வாக்குக்கு தவெக பணம் வழங்காது
தொடர்ந்து, வன்னி அரசுக்கான பதவி அல்ல.. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவமாகும். இந்த அரசியல் எதிர்க்கட்சித் தலைவர் உரை நிதிக்கு தெரியாது. 15 எம்பிக்கள் வைத்துக் கொண்டு 8 அமைச்சர்கள் இடங்கள் வாங்கினீர்களே. அதே, விசிகவும், ஐ. யூ. எம். எல்.லும் அமைச்சர் பதவிகள் வாங்கினால் சோபா வாங்கிவிட்டார்கள் என்று கூறுவதா. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்குகளை பெறுவதற்கு யாருக்கும் பணம் வழங்க மாட்டோம். தமிழக வெற்றி கழகத்தினர் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
மேலும் படிக்க: ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு வழக்கு.. திமுக பிரமுகர் அதிரடி கைது… பின்னணி என்ன?




திமுக அதிகாரத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும்
திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் அதிகாரத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும். திமுக 2- ஆவது முறை வென்றதாக வரலாறு கிடையாது. தமிழக அரசியல் வரலாற்றில் சிறப்பான ஆளும் கட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் இருந்தது இல்லை. ஆட்சி அதிகாரத்தை பெற்று, குடும்ப ஆட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை திராவிட முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான மு. க. ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்.
கூட்டணி இன்றி திமுக 10 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா
கூட்டணி இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தால் 10 தொகுதிகளில் வெற்றி பெற்று காண்பிக்க முடியுமா… தமிழக வெற்றிக் கழகம் தனித்து 150 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், கூட்டணி ஆட்சி முறை தொடரும் என்று தெரிவித்தார். இதே போல, கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர்களும் தவெக வேட்பாளரை ஆதரித்து பேசி பரப்புரை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: தவெக மா.செ.வுக்கு என் மனைவியுடன் தொடர்பு.. கதறும் கணவன்.. திருப்பி அடித்த மனைவி.. திருவள்ளூரில் பரபரப்பு!