வளர்ப்பு நாய்களைத் தெருவில் விடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..
வளர்ப்பு நாய்களைப் பொது இடங்களில் கைவிடும் உரிமையாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ரூ.25,000 அபராதம் விதிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி முன்வைத்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதும், அபராதம் வசூலிக்கும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 11, 2026: சென்னையில் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், விலங்குகள் நலனைப் பாதுகாக்கவும் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வளர்ப்பு நாய்களைத் தெருக்களிலும் பொது இடங்களிலும் கைவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களில் சிலர் தாங்கள் வளர்க்கும் நாய்களைத் தெருக்களிலும் பொது இடங்களிலும் கட்டுப்பாடின்றி திரிய விடுவதால், நகரின் பல்வேறு பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் 15 மண்டலங்களில் பதிவு செய்யப்பட்ட வளர்ப்பு நாய்:
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இதுவரை 1,15,548 வளர்ப்புப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மைக்ரோசிப் பொருத்தப்பட்ட செல்லப்பிராணி உரிமங்கள் 78,328 விலங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தெருநாய்கள் தொடர்பாக 15,477 புகார்கள் மாநகராட்சிக்கு வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,869 புகார்களும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 280 புகார்களும் பதிவாகியுள்ளன.
ரேபிஸ் தடுப்பூசி:
இதனிடையே, வெறிநோய் பரவலைத் தடுக்கும் வகையில் திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் செவ்வாய்க்கிழமை முதல் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த முகாம்கள் மூலம் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெருநாய்களுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: கட்டுக்கடங்காத காட்டுத்தீ.. சதுரகிரியில் பக்தர்கள் மலையேற தடை..
அடுத்த 75 வேலை நாட்களில் சுமார் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் 26,498 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், வளர்ப்பு நாய்களை உரிமையாளர்கள் பொது இடங்களில் கைவிடுவதைத் தடுப்பதில் சிரமம் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை எங்கெல்லாம் மழை இருக்கும்? வட உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை..
வளர்ப்பு நாய்களை தெருவில் விட்டால் ரூ.25,000 அபராதம்:
இதனைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களைப் பொது இடங்களில் கைவிடும் உரிமையாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ரூ.25,000 அபராதம் விதிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி முன்வைத்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதும், அபராதம் வசூலிக்கும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.