கட்டுக்கடங்காத காட்டுத்தீ.. சதுரகிரியில் பக்தர்கள் மலையேற தடை..
இதையடுத்து, பக்தர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே சதுரகிரி மலைக்குச் சென்றிருந்த பக்தர்கள் அனைவரும் வனத்துறையினரின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அடிவாரத்தை நோக்கித் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 11, 2026: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தனிப்பாறை வனப்பகுதியில் இரண்டாவது நாளாக காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருவதால், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமாகும். இங்கு சிவராத்திரி, ஆடி அமாவாசை உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆடி அமாவாசையன்று சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம்:
அந்த வகையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்பதால், வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் சதுரகிரி மலை அடிவாரத்தில் குவிந்தனர்.
பற்றி எறியும் காட்டுத்தீ:
இந்த நிலையில், தனிப்பாறை வனப்பகுதியில் நேற்று இரவு காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், காட்டுத்தீ மலையின் கீழ்ப்பகுதியை நோக்கி வேகமாகவும் கட்டுக்கடங்காமலும் பரவி வருகிறது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தொடர்ந்து வீசும் பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயின் தீவிரம் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மலையேற பக்தர்களுக்கு தற்காலிக தடை:
இதையடுத்து, பக்தர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை எங்கெல்லாம் மழை இருக்கும்? வட உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை..
ஏற்கனவே சதுரகிரி மலைக்குச் சென்றிருந்த பக்தர்கள் அனைவரும் வனத்துறையினரின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அடிவாரத்தை நோக்கித் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். சிறப்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரி வந்த பக்தர்கள், காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட தற்காலிகத் தடையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.