புதுச்சேரியில் விரைவில் இடைத்தேர்தல்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதல்வர் ரங்கசாமி.. என்ன காரணம்!
CM Rangasamy Resign Thattanchavady MLA Post : புதுச்சேரி மாநிலத்தில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக அந்த தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தின் புதிய அரசாக என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல் அமைச்சராக என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை முதல்வர் ரங்கசாமி ராசியாக கருதி வருகிறார். அதன்படி, தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தட்டாஞ்சாவடி தொகுதியிலும், முன்னாள் வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த மங்களம் ஆகிய இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டு இருந்தார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார்.
தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதல்வர்
இந்த நிலையில், மங்கலம் தொகுதி எம்எல்ஏ பதவியை வைத்துக்கொண்டு தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியே ரங்கசாமி ராஜினாமா செய்து உள்ளார். இதற்கான, ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சட்ட பேரவை செயலாளர் தயாளனிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், விரைவில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, விரைவில் தட்டஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க: காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி.. மீன்பிடி வலையில் கால் சிக்கியதால் விபரீதம்?
இரு தொகுதிகளில் போட்டியிடுவதை ராசியாக கருதும் முதல்வர்
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை ராசியாக கருதி வரும் முதல்வர் ரங்கசாமி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதி மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏனாம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டு இருந்தார். ஆனால், தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றியை பதிவு செய்த முதல்வர் ரங்கசாமி, ஏனாம் தொகுதியில் தோல்வியை தழுவினார்.
18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக கூட்டணி
இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என். ஆர். காங்கிரஸ் கட்சி 12 இடங்கள், பாஜக 4 இடங்கள், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
மேலும் படிக்க: மதுரை அருகே பயங்கர சாலை விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!