AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காங்கிரஸ் இஃப்தார் நிகழ்ச்சியில் ‘சீட்’ அரசியல் – பதில் சொல்லாமல் நழுவிய செல்வப்பெருந்தகை

Women Leaders Demand Election Seats: சென்னை எழும்பூரில் நடந்த மகளிர் காங்கிரஸ் இஃப்தார் நிகழ்ச்சியில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார். இதை தொடர்ந்து ஹசீனா சையத் தமக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என மேடையிலேயே கோரிக்கை வைத்தார். அதற்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேரடி பதில் அளிக்காமல் நழுவிச் சென்றது அரசியல் பேசுபொருளாகியுள்ளது.

காங்கிரஸ் இஃப்தார் நிகழ்ச்சியில் ‘சீட்’ அரசியல் – பதில் சொல்லாமல் நழுவிய செல்வப்பெருந்தகை
இஃப்தார் நிகழ்ச்சிImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Mar 2026 11:03 AM IST

சென்னை மார்ச் 09: சென்னை எழும்பூரில் நடைபெற்ற மகளிர் காங்கிரஸின் இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சி, வழக்கமான ஒரு நிகழ்வாக இல்லாமல், தேர்தல் நேரத்து “சீட்” பாலிடிக்ஸ் களமாக மாறியது அக்கட்சியினரிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் சமத்துவ இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி ஹசீனா சையத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கார்த்தி சிதம்பரம் பேச்சில் பெண்களுக்கு வாய்ப்பு கோரிக்கை

இந்த நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி சிதம்பரம் தனது வழக்கமான அதிரடி பாணியில் பேச்சைத் தொடங்கினார். மகளிர் தினத்தை கொண்டாடும் இந்தவேளையில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், காங்கிரஸ் கட்சியின் கடந்த கால அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு கோரியபோது, அன்றைய சில தலைவர்கள் “பெண்கள் போட்டியிட்டால் ஜெயிப்பார்களா?” என கேள்வி எழுப்பியதாகவும், அதனால் கட்சிக்குள் கடும் விவாதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், ஆண் நின்றாலும் பெண் நின்றாலும் சமம் தான் என்றும் கூறினார்.

சிறுபான்மை பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்

சட்டமன்றத்தில் ஒரு சீட் கூட சிறுபான்மையினருக்குக் கொடுக்காமல் இருப்பது தவறு என்றும், குறிப்பாக பெண்களுக்கு 3-ல் 1 பங்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார். அதிலும் சிறுபான்மை மகளிருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அது “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சு அப்போது மேடையேறிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஒருவித அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.

மகளிர் காங்கிரஸ் தலைவி நேரடி கோரிக்கை

கார்த்தி சிதம்பரம் கிளப்பிய பெண்களுக்கு வாய்ப்பு விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்துக்கொண்டார் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத். நிகழ்ச்சிக்கு வந்த சில நிமிடங்களிலேயே செல்வப்பெருந்தகை கிளம்பத் தயாரான வேளையில், அவரை ஒரு நிமிடம் தடுத்து நிறுத்தி தொப்பி அணிவித்ததுடன் தனது கோரிக்கையையும் நேரடியாக முன்வைத்தார். மகளிர் காங்கிரஸ் சார்பில் இந்த தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Also Read: விஜய்க்கு அரசியல் எதற்கு… உங்களது உண்மை முகம் என்ன? தவெக பெண் நிர்வாகி காரசாரமான கேள்வி!

மேடையிலேயே ‘சீட்’ கோரிக்கை வைத்த ஹசீனா

“குழந்தை அழுதால் தான் பசிக்கும் என்பது தெரியும். அதனால் அண்ணனிடம் நேரடியாகவே கேட்கிறேன்” என்று கூறிய ஹசீனா சையத், தமக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என மேடையிலேயே பகிரங்கமாக கோரிக்கை வைத்தார். இதன் மூலம் கார்த்தி சிதம்பரம் பேச்சில் விதைக்கப்பட்ட பெண்கள் ஒதுக்கீடு விவகாரம், அங்கேயே அரசியல் கோரிக்கையாக மாறியது. ஹசீனா சையத்தின் இந்த நேரடி கோரிக்கை, அங்கு இருந்தவர்களுக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

பதில் தவிர்த்து நழுவிய மாநில தலைவர்

கார்த்தி சிதம்பரத்தின் மறைமுக கோரிக்கையை கேட்டபோது அமைதியாக இருந்த செல்வப்பெருந்தகைக்கு, ஹசீனாவின் இந்த நேரடி கோரிக்கை சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் உடனே நிலைமைக்கு தன்னை ஏற்படுத்திக் கொண்ட அவர், “சீட்” தொடர்பான கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், கட்சியின் நிர்வாக பொறுப்புகள் குறித்து பேசத் தொடங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 5 இஸ்லாமியர்களுக்கு மாவட்ட தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அதில் ஒரு இஸ்லாமிய பெண் மாவட்டத் தலைவரும் உள்ளார் என்றும் பொதுவாகக் கூறி பதிலை மாற்றினார்.

வேட்பாளர் பட்டியலில் தெரியும் உண்மை

அதன் பிறகு மேலும் விவாதம் நீளாமல், அடுத்த நிமிடமே மேடையை விட்டு செல்வப்பெருந்தகை வேகமாக வெளியேறினார். மொத்தத்தில் எழும்பூர் இஃப்தார் நிகழ்ச்சி சமத்துவ நோன்பு நிகழ்வாக தொடங்கி, பெண்களுக்கு சம வாய்ப்பு கோரிக்கையாக மாறிய அரசியல் தருணமாக மாறியது. கார்த்தி சிதம்பரம் முன்வைத்த 3-ல் 1 பங்கு பெண்கள் வேட்பாளர் கோரிக்கை, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வில் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இந்த அழுத்தத்திலிருந்து எவ்வாறு சமாளிப்பார் என்பது வரவிருக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே தெளிவாகும்.

Follow Us