குதிரை பேர வழக்கு – திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடை விதித்த நீதிமன்றம்
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27. 2026 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
சென்னை, ஆகஸ்ட் 4 : தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவிருப்பதாக கூறி அதற்கு ஆதரவு தெரிவித்தால், ரூ. 35 கோடி வரை தருவதாக பேரம் பேசியதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடை விதித்த நீதிமன்றம்
இந்த வழக்கில் சென்னை அரும்பாகத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 14 பேர் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க : உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு




இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள ரமேஷ், சேதுராஜ், கார்த்திக் ஆகியோர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். புதிதாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள் ஆகஸ்ட் 4, 2026 இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் “மாநில காவல் துறையினர் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு ஏதேனும் விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இந்த நிலையில் திருவல்லிக்கேணி காவல்துறை தரப்பில், பொய் வழக்கு ஜோடிக்க அவசியம் இல்லை என்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிகக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு தரப்பில்,வழக்கின் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்துவருவதை சுட்டிக்காட்டி, குதிரை பேரம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27, 2026 அன்று ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது.