தமிழகத்தில் 7 முனை போட்டி நிலவும் சூழல்… ஆட்சி அரியணையில் அமரப்போவது யார்!
Tamilnadu Assemply Eelection: தமிழகத்தில் திமுக, தேஜ கூட்டணி, நாதக, தவெ, ராமதாஸ்-சசிகலா,தவாக, புதிய தமிழகம் என 7 முனை போட்டி நிலவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 7 முனை போட்டியில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, அமமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. இதில், திமுக தலைமையிலான கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தற்போது திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவி வந்த நிலையில், 5- ஆவதாக ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் சசிகலா தலைமையிலான அஇபுதமமுக கூட்டணி கட்சி போட்டிக்கு வந்தது. தற்போது, 7 முனை போட்டி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில், தென் மாவட்டங்களில் தேவேந்திர சமுதாய வேளாளர்களின் வாக்கு வங்கியை வைத்திருக்கும் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் 7 முனை போட்டி
இதே போல, தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 7 முனை போட்டி நிலவும் சூழல் உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கூறியதால் அந்த கூட்டணியில் இணைவதற்கு கிருஷ்ணசாமி மறுத்திருந்தார்.
மேலும் படிக்க: யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு!!




திமுக-தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள்
மேலும், தென் மாவட்டம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்துள்ளன.
ஆட்சிக்கட்டிலில் ஏறப்போவது யார்
இதேபோல, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக, பாமக ( அன்புமணி தரப்பு), அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண உள்ளன. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தான் தெரியவரும்.
மேலும் படிக்க: ‘234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி’.. இன்று வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் விஜய்!!