திமுகவினரிடம் SORRY கேட்ட முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?.. முழு விவரம்!!
CM Vijay Apologizes in Assembly: தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையைத் தொடங்கும் முன் "சாரி" கேட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்காக ரூ.6,220 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்தார். நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் 13.34 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
சென்னை, ஆகஸ்ட் 17: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் அரங்கேறியது. 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றத் தொடங்குவதற்கு முன்பாக, அவையில் எழுந்த ஒரு சிறு இடைமறிப்புக்கு நாகரிகமான முறையில் பதிலளித்தார். “முதல்ல உங்க தலைவரோட பேர மென்ஷன் பண்ணி பேசினது தவறுதான், அவர் சார்பா நான் சாரி கேட்டுக்கிறேன்” என்று அவையில் இருந்த திமுக உறுப்பினர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சட்டமன்ற விவாதங்களின் போது காட்டிய இந்த நாகரிகமான அணுகுமுறை மற்றும் நேர்மை அவையில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதையும் படிக்க: “ஆதாரம் என்கிட்ட இருக்கு!”.. பேரவையில் புள்ளிவிவரங்களுடன் பாய்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. திமுக-வினருடன் கடும் வாக்குவாதம்!
விவசாயிகள் நம் உயிர்நாடி:
இதனைத் தொடர்ந்து உணர்ச்சிப்பூர்வமாகத் தனது உரையைத் தொடங்கிய முதலமைச்சர் விஜய், “தமிழக மக்கள் நம் உயிர் என்றால், தமிழக விவசாயிகள் நம் உயிர்நாடி” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். உலகில் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடைபெறும் ஒரே தொழில் விவசாயம் மட்டுமே என்றும், உலகின் ஒரு மூலையில் உற்பத்தியாகும் உணவுப் பொருள் மற்றொரு மூலையில் உள்ள மக்களின் பசியைப் போக்குவதாகவும் கூறினார். எந்த நாடு உழவுத் தொழிலை மதித்து விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்கி வருகிறதோ, அந்த நாட்டில் தான் மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்று எடுத்துரைத்தார்.
கடன் சுமையைக் குறைக்கத் தீவிர நடவடிக்கை:
தமிழக வெற்றிக்கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோதிலும், பதவி ஏற்ற 15 நாட்களுக்குள்ளாகவே விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கத் தீவிர நடவடிக்கை எடுத்ததாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். முதற்கட்டமாக, கடந்த மே 25-ஆம் தேதி ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளைக் பரிசீலித்து, நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் ₹75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையையும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரையிலும் தள்ளுபடி செய்து சுமார் 14.44 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.5,932.23 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆர்பிஐ உத்தரவை சுட்டிக்காட்டிய முதல்வர்:
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடன் நடத்திய விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில், பயிர்க்கடன் தள்ளுபடியை மேலும் அதிகரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார். கடந்த காலங்களில் கடன் தள்ளுபடித் தொகையை அரசு 4 முதல் 5 ஆண்டுகள் வரை 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தி வந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதலின்படி 45 முதல் 60 நாட்களுக்குள் முழுத் தொகையையும் செலுத்த வேண்டிய சட்டப்பூர்வக் கடமை இருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
ரூ.75,000 வரை 100% பயிர்க்கடன்கள் தள்ளுபடி:
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, கூடுதல் தள்ளுபடித் திட்டத்தை அரசு தற்போது செயல்படுத்துகிறது. இதன்படி, ரூ.75,000 வரை பெற்ற பயிர்க்கடன்கள் 100% முழுமையாகவும், ரூ.75,000 முதல் ₹1 லட்சம் வரை பெற்றுள்ள கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலும், ரூ.1 லட்சத்திற்கு மேல் பெறப்பட்ட கடன்களுக்கு ரூ.35,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம் ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்ற 2.38 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடுதலாக ரூ.40,000 வரை பயன்பெறுவர்.
இதையும் படிக்க: ஐபிஎல் ஸ்டேடியத்தில் போதைப்பொருளா?.. பேரவையில் உதயநிதி vs அமைச்சர் சரத் கடும் மோதல்..
ரூ.6,220 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி:
இந்தக் கூடுதல் தள்ளுபடி நடவடிக்கையால் அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற போதிலும், “தமிழக விவசாயிகளின் நலனில் தான் நமது நலன் உள்ளது” எனக் கருதி, மொத்தம் 13.34 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.6,220 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் பெருமிதத்துடன் அறிவித்தார்.