சென்னை டூ கேரளம் பருந்து போல பறக்கலாம்.. வருகிறது புல்லட் ரயில் சேவை… திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கேட்பு!
Chennai To Kerala Bullet Train: சென்னையில் இருந்து இரு வழித்தடங்களில் கேரள மாநிலத்துக்கு புல்லட் ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரி உள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரயில் போக்குவரத்தை வேகப்படுத்தும் வகையில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும், சுமார் 17 வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில், முதல் கட்டமாக மும்பை- அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்கப்படுவதற்கான திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்- சென்னை, மைசூர்- சென்னை வழித்தடங்களில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதே போல, தமிழ்நாடு- கேரளம் இடையே புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், சென்னை- திருச்சி- நாகர்கோவில்- திருவனந்தபுரம் மற்றும் சென்னை- சேலம்- கோயம்புத்தூர்- எர்ணாகுளம் ஆகிய 2 வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சரக்கு போக்குவரத்து வழித்தடம்
இதே போல, கிழக்கு கடற்கரை சரக்கு போக்குவரத்து வழித்தடத் திட்டமானது ஆந்திர மாநிலம், விஜயவாடாவுடன் முடிவடைகிறது. இந்த வழித்தடத்தை சென்னை- தூத்துக்குடி- கன்னியாகுமரி வரை நீட்டிப்பதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரி உள்ளது. இதனிடையே, சென்னை- ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் சேவை தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது இந்த அறிக்கையை மத்திய ரயில்வே தமிழக அரசிடம் அளித்துள்ளது.
மேலும் படிக்க: சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி… ஓசூரில் ஓட்டலின் அதிரடி சலுகை!
சென்னை – ஐதராபாத் புல்லட் ரயில் சேவை
மேலும், தென் மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் புல்லட் ரயில் சேவையே தொடங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னை- ஐதராபாத் இடையே புல்லட் ரயில் சேவை தொடங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடம் தொடர்பான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயிலுக்கான வழித்தடம் திருப்பதி வழியாக அமைக்கப்பட திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இரு இடங்களில் புல்லட் ரயில் நிலையங்கள்
தற்போது, சென்னை ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் ரயில் நிலையம் செல்வதற்கு 12 மணி நேரம் ஆகிறது. ஆனால், இந்த புல்லட் ரயிலில் பயணம் செய்தால் 778 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 2.20 மணி நேரத்தில் சென்றடையலாம். தமிழகத்தில் 61 கிலோ மீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், 11.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதையாக அமைக்கப்படும். சென்னை சென்ட்ரல், மீஞ்சூர் (ரிங் ரோடு) ஆகிய இடங்களில் புல்லட் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: வேகமான நகர்புற வளர்ச்சியை காணும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?



