அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி… திமுக வீட்டு மக்களுக்கான கட்சி.. எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Edappadi K Palaniswami : அதிமுக நாட்டு மக்களுக்கும், திமுக வீட்டு மக்களுக்கும் ஆட்சி செய்து வருவதாக திருவள்ளூரில் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டிருந்த அ. தி. மு. க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ” மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று புதன்கிழமை ( பிப்ரவரி 25) திருவள்ளூர் மத்தியம், மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். இதில், மதுரவாயல்- ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் அவர் ஆற்றிய உரையில், ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தேர்தல் பயம் காரணமாகவே முன்கூட்டியே பெண்களுக்கு ரூ.5000 உரிமை தொகையை வழங்கி உள்ளார். இந்த தொகையை அளித்துவிட்டு சூப்பர் ஹிட் என்று கூறியுள்ளார். ஆனால், அதிமுக ரூ.10 ஆயிரம் அறிவித்தது தான் சூப்பர் ஹிட் ஆகும். மக்களிடம் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று திமுக கூறியுள்ளது.
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்பதே கனவு
மக்களிடம் சென்று கேட்டால் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அவர்களது கனவை கூறுகின்றனர். பல்வேறு திட்டங்களை அறிவித்துவிட்டு அதற்காக போட்டோ ஷூட் நடத்திவிட்டு பொய்யான ஆட்சியை ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். அதிமுக நாட்டு மக்களுக்காகவும், திமுக வீட்டு மக்களுக்காகவும் ஆட்சி செய்து வருகிறது. அதிமுக பாஜகவுக்கு அடிமையாக இருப்பதாக திமுக கூறுகிறது. ஒரு காலத்தில் திமுக கட்சி அலுவலகத்தில் ரைடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, காங்கிரசுடன் திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது.
மேலும் படிக்க: “என் சக்திக்கு மீறி உழைத்து வருகிறேன்”.. ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும்.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..




காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ள திமுக
அப்போது, திமுகவை மிரட்டி காங்கிரஸ் கட்சி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றிருந்தது. இதனால், திமுக தான் காங்கிரசுக்கு அடிமையாக உள்ளது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி இருக்குமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. திமுகவிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடிமையாக இருப்பதன் காரணமாகவே அந்த கட்சி வளராமல் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் முதல் இடத்திலும், முதல்வர் பட்டியலில் மு. க. ஸ்டாலினும் முதல் இடத்தில் உள்ளார்.
கருணாநிதி அறக்கட்டளையில் ரூ. 8 ஆயிரம் கோடி
முன்னாள் முதல்வர் கருணாநிதி மூலமாக இந்த இடத்துக்கு ஸ்டாலின் வந்துள்ளார். நான் மக்களோடு மக்களாக இருந்து இந்த இடத்துக்கு வளர்ந்துள்ளேன். கருணாநிதியின் அறக்கட்டளையில் ரூ.8 ஆயிரம் கோடி உள்ளது. அந்த நிதியின் மூலம் நடுக்கடலில் பேனா சிலை வைக்கலாம். ஆனால், மக்களின் வரிப்பணத்தில் பேனாவுக்கு சிலை வைக்க முயற்சி செய்து வருகின்றனர். வருகிற தேர்தலில் அதிமுகவுக்கு ராஜ்ஜியமும், தி மு கவுக்கு பூஜ்ஜியமும் கிடைக்கும். திமுக கூட்டணியை நம்பி தேர்தலை சந்திக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ரூ.290 கோடியில் 6 முக்கிய அறிவிப்புகள்… முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்!