“அதிமுகவிடம் 35 தொகுதிகள் கேட்கும் பாஜக”.. நாளை தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவு?
NDA alliance seat sharing: இந்த பட்டியலில் இருந்து 35 தொகுதிகளை கண்டிப்பாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் தற்போது பாஜக வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் இதற்கான பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம், பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் வழங்கியிருந்தனர்.
சென்னை, பிப்ரவரி 25: அதிமுகவிடம் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை சென்னை வருகிறார். தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 72 சட்டமன்ற தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் கொடுத்ததுள்ள பாஜக, அதிலிருந்து 35 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதையொட்டி, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிக்க: ஆட்சிக்கு வந்தால்.. “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000”.. அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள் இதோ!!
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள்:
அந்தவகையில், தமிழகத்தில் அதிமுக -பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகா, அமமுக, பாமக (அன்புமணி தரப்பு) உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. விரைவில் அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. இதற்கிடையே அதிமுகவிடம் கடந்த முறையைவிட இந்த முறை கூடுதல் தொகுதிகளை பெற்றிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
செல்வாக்குள்ள 72 தொகுதிகளின் பட்டியல்:
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் கிட்டத்தட்ட 80 தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடம் பிடித்திருந்தது. இந்த 80 இடங்களில் 72 தொகுதிகளை தேர்வு செய்து பாஜக பட்டியல் தயார் செய்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து 35 தொகுதிகளை கண்டிப்பாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் தற்போது பாஜக வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் இதற்கான பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம், பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் வழங்கியிருந்தனர்.
அதிமுக பலமாக உள்ள தொகுதிகளையும் கேட்கும் பாஜக:
இந்த 35 தொகுதிகளில் அதிமுக பலமாக இருக்கும் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. அதன்படி, பாஜக கேட்டுள்ள தொகுதிகளில் ஆயிரம் விளக்கு, கோயம்பேடு, மயி லாப்பூர், தியாகராயநகர், கோயம்பேடு, திருத்தணி, காஞ்சிபுரம், ஆவடி, தனி, அம்பத்தூர், தென்காசி, கோவை சிங்காநல்லூர், அரவக்குறிச்சி, திருவண்ணாமலை, பழனி, நாகர்கோவில், விளவங்கோடு, காரைக்குடி, மொடக்குறிச்சி, வேலுார் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜகவுக்கு 35, அமமுகவுக்கு 6 தொகுதிகள்:
இதற்கிடையே, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு வேண்டிய தொகுதிகளை பாஜகவே ஒதுக்க வேண்டியது இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், அமமுக கோரி வரும் 6 தொகுதிகளையும் கூடுதலாக ஒதுக்கும்படி பாஜக கேட்டு வருகிறது. அதன்படி, பாஜகவுக்கு 35, அமமுகவுக்கு 6 என்ற அடிப்படையில் அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: “உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..
நாளை பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை:
நாளை (பிப்.26) தமிழகம் வர உள்ள பியூஸ் கோயல் தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் படும் என்பது இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.