கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ரூ.290 கோடியில் 6 முக்கிய அறிவிப்புகள்… முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்!
Kanyakumari 6 Important Announcements: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 6 முக்கியமான அறிவிப்புகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி அடையும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அது என்னென்ன அறிவிப்புகள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 2 நாள்கள் சுற்றுப் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். 2- ஆவது நாளான இன்று புதன்கிழமை ( பிப்ரவரி 25 ) திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, புத்தளம் அருகே கள்ளடிவிளையில் மு. க. ஸ்டாலின் படைப்பகம், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி முழு உருவ சிலை, ரூ. 30 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார். இதில்,
மேலும் படிக்க: “ரூ.1,020 கோடி ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?”.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக சரமாரி கேள்வி!!
- கன்னியாகுமரியில் ரூ. 28.20 கோடியில் குடிநீர் திட்டம் அமைக்கப்படும்.
- கன்னியாகுமரியில் ரூ. 250 கோடியில் புதிதாக கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்படும்.
- வலையாற்றில் இருந்து கன்னியாகுமரி நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- ரூ.1. 20 கோடி மதிப்பீட்டில் ஏ. வி. எம். கால்வாய் புனரமைப்பு செய்யப்படும்.
- ரூ. 2 கோடியில் முளகு மூடு தேவாலயம் பழைமை மாறாமல் புணரமைப்பு செய்யப்படும்.
- ரூ.9 கோடி மதிப்பீட்டில் களியக்காவிளை – கன்னியாகுமரி சாலை அகலப்படுத்தப்படும் ஆகிய 6 அறிவிப்புகளை முதல்வர் அறிவித்திருந்தார்.
டைடல் பூங்கா மூலம் 600 பேருக்கு வேலை
இதைத் தொடர்ந்து, அவர் மேலும் பேசுகையில், இந்திய துணை கண்டத்தின் தொடக்கமாகவும், தமிழகத்தின் தனித்துவமான மாவட்டமாகவும் கன்னியாகுமரி மாவட்டம் விளங்கி வருகிறது. நான் தற்போது இந்திய துணை கண்டத்தின் தொடக்கமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன். கன்னியாகுமரியில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் 61,500 சதுர அடியில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு ரூ.4,260 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.




தமிழகத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகள் அமைப்பு
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 7 பாலங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு பணிகளும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதே போல, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் திமுக அரசு உருவாக்கி உள்ளது. 50 ஆண்டுகால உழைப்பின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற இடத்தை அடைந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு.. நலம் விசாரிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்..