பால், தயிர் விலை மீண்டும் உயர்வு.. தனியார் நிறுவனங்களின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..
Milk and Curd Price Hike: இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்ந்துள்ளதால், குறைந்த விலையில் கிடைக்கும் ஆவின் பாலுக்கு பொதுமக்கள் அதிகளவில் மாறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜூலை 27, 2026: தனியார் பால் நிறுவனங்கள் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கடந்த ஓராண்டாக பால் உற்பத்தி குறைவு நிலவி வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் ஆவின் பாலை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாக ஆவின் பால் விற்பனையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பலர் தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.
பால், தயிர் விலை உயர்வு:
இந்தச் சூழலில், பால் வணிகத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலை வழங்க தனியார் நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. இதன் காரணமாக, நடப்பாண்டில் இரண்டாவது முறையாக தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தியுள்ளன.
அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்கரா உள்ளிட்ட நிறுவனங்கள், பால் மற்றும் தயிரின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் முதலமைச்சர் அலுவலகம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
பால் மற்றும் தயிர் அன்றாட உணவில் முக்கிய இடம் பெறும் அத்தியாவசியப் பொருட்களாக இருப்பதால், மீண்டும் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 6 வரை உயர்த்தப்பட்ட பாலின் விலை:
பால் உற்பத்தி குறைவு, பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் விலை உயர்வு செய்யப்பட்டதாக நிறுவனங்கள் தெரிவித்தாலும், பால் முகவர்களின் கமிஷன் மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்துவதில் தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திமுகவை பழிவாங்குவதே தவெகவின் ஒரே பணியாக உள்ளது.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்ந்துள்ளதால், குறைந்த விலையில் கிடைக்கும் ஆவின் பாலுக்கு பொதுமக்கள் அதிகளவில் மாறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் வலியுறுத்தியுள்ளனர்.