AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் – எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம்..

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற இலக்குடன் தாம் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களில் மக்கள் அளிக்கும் ஆதரவு, கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார். “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற அம்மா அவர்களின் கோட்பாட்டை நினைவுகூர்ந்த அவர், அதிமுக என்றும் மக்கள் இயக்கமாகத் தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் – எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Feb 2026 17:01 PM IST

சென்னை, பிப்ரவரி 23, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) இந்த முறை வெற்றி பெறத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும், அதை வாழ்நாள் முழுவதும் அரண் போல் காத்த புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் இதயத் தெய்வமாக மதிக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழக மக்களுக்கும் என் அன்பான வணக்கம்” என்று தொடங்கியுள்ளார்.

தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்:

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த நேரத்தில், அவரது புகழ் ஒவ்வொரு இல்லத்திலும் ஒலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு, கல்வி, சமூக–பொருளாதார முன்னேற்றம் ஆகிய துறைகளில் அம்மா அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை மக்கள் இன்றும் நினைவுகூருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்.. மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும், அம்மா அவர்களின் ஆட்சி காலத்திலும், பின்னர் தாம் தலைமையிலான ஆட்சிக் காலத்திலும் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகும், இருபெரும் தலைவர்களின் கொள்கை வழியில் கழகம் மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

திறனற்ற அரசாக திமுக உள்ளது:

தற்போதைய திமுக ஆட்சி மக்கள் விரோதமும் குடும்ப ஆட்சியுமாக செயல்படுகிறது என குற்றம்சாட்டிய அவர், சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் பரவல் அதிகரித்துள்ளது என்று விமர்சித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கவும், இருமொழிக் கொள்கையை நிலைநாட்டவும் அரசு திறனற்றதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது… நயினார் நாகேந்திரன் அளித்த பதில்!

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்:

தமிழகம் அமைதிப் பூங்காவாகவும், பொருளாதார முன்னேற்ற மாநிலமாகவும் திகழ வேண்டுமெனில் அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற இலக்குடன் தாம் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களில் மக்கள் அளிக்கும் ஆதரவு, கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற அம்மா அவர்களின் கோட்பாட்டை நினைவுகூர்ந்த அவர், அதிமுக என்றும் மக்கள் இயக்கமாகத் தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வெற்றிக் கூட்டணியில் நிற்கும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் வெற்றிக்காக முழுமுயற்சியுடன் பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.