AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா?.. குதிரை பேர வழக்கு சிபிஐக்கு மாறுமா?.. தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம்!

TVK MLA Horse Trading: சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது தவெக எம்.எல்.ஏ இளையராஜாவைத் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைக்க ரூ.35 கோடி குதிரை பேரம் பேசியதாகப் பதியப்பட்ட வழக்கின் விசாரணை நியாயமாக நடக்கவில்லை எனக் கூறி, அதனைச் சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவின் மீதான தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா?.. குதிரை பேர வழக்கு சிபிஐக்கு மாறுமா?.. தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம்!
சென்னை உயர்நீதிமன்றம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Jul 2026 13:47 PM IST

சென்னை, ஜூலை 16: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றவும், பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது தவெக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரத்தில் ஈடுபடுத்த முயன்றதாகவும் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. இந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவின் மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றன.

இதையும் படிக்க: லஞ்சப் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!!

கோடி குதிரை பேரப் புகார்:

தமிழகச் சட்டப்பேரவைத் தலைவருக்கு (சபாநாயகர்) எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணிக்கவும் அல்லது தங்களுக்கு ஆதரவாகச் செயல்படவும் கோரி, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் சிலர் குதிரை பேரம் பேசியதாகப் புகார் எழுந்தது. இதற்காக அவருக்கு ரூ.35 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு இதுவரை 10 பேரைக் கைது செய்துள்ளனர்.

வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு:

இந்த வழக்குத் தொடர்பாகத் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜே. பாலசுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “இந்த குதிரை பேர விவகாரத்தில் மாநிலக் காவல்துறையின் விசாரணை ஆரம்பத்திலிருந்தே முற்றிலும் ஒருதலைப்பட்சமாக உள்ளது. இதில் அரசியல் உள்நோக்கங்கள் அதிகம் இருப்பதால், நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெற இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் காரசார விவாதம்:

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோதி வாதிடுகையில், “தமிழகத்தில் அரங்கேறி வரும் குதிரை பேரங்களை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. ஊத்தங்கரையிலிருந்து சென்னைக்கு வந்து தவெக எம்.எல்.ஏ அளித்த புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, இதேபோன்ற புகார் அளித்த 5 திமுக எம்.எல்.ஏ-க்களின் புகார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் பாரபட்சமான நடவடிக்கையை மாநிலக் காவல்துறை மேற்கொண்டு வருகிறது. சிலரிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலங்களும் பெறப்படுகின்றன” என்றார்.

அரசு தரப்பு வாதம்:

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், “பாதிக்கப்பட்டுப் புகார் அளித்தவர்கள் யாரும் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடவில்லை. மாநிலப் போலீசார் இந்த வழக்கை மிகத் தீவிரமாகவும் முறையாகவும் விசாரித்து வருகின்றனர். ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கை வேறு எந்த விசாரணை அமைப்பிற்கும் மாற்றத் தேவையில்லை.”

நீதிபதிகள் கேள்வி – தீர்ப்பு தள்ளிவைப்பு:

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “வழக்கின் தீவிர விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மற்ற புகார்தாரர்களின் குற்றச்சாட்டுகளின் மீது ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை?” என்று காவல்துறைக்குக் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க: பழனி நில மோசடி விவகாரம்.. யார் அந்த பவர் சென்டர்?.. CBI விசாரணை கோரி முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் சரமாரி கேள்வி..

மேலும், தற்போதைய நிலையில் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை நீதிமன்றம் தள்ளி வைப்பதாகவும், மிக விரைவில் இந்த மனு மீதான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் கூறி உத்தரவிட்டனர். இத்தீர்ப்பு தவெக மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us