செயற்கை நிறமிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளத்திற்கு தடை.. உணவு பாதுகாப்புத்துறை கொடுத்த எச்சரிக்கை..
பாரம்பரிய முறையில் உளுந்து, அரிசி உள்ளிட்ட இயற்கையான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அப்பளங்களை மட்டுமே வாங்கி சாப்பிட வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதிக அளவு செயற்கை நிறமிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ‘கலர் அப்பளங்களை’ சந்தைகள், சுற்றுலாத் தளங்கள், பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூலை 16, 2026: கண்ணைக் கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் விற்பனை செய்யப்படும் ‘கலர் அப்பளம்’ குறித்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக அளவு செயற்கை நிறமிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த வகை அப்பளங்களை விற்பனை செய்ய தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலர் அப்பளத்திற்கு தடை:
சந்தைகள், சுற்றுலாத் தளங்கள், பொருட்காட்சிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்ணைக் கவரும் வண்ணங்களில் விற்பனை செய்யப்படும் அப்பளங்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிட வேண்டாம் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கு இந்த வகை வண்ண அப்பளங்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கூடுவாஞ்சேரி பணிமனையில் பராமரிப்புப் பணிகள்.. 8 மின்சார ரயில்கள் நாளை ரத்து..
அதிக அளவு செயற்கை நிறமிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ‘கலர் அப்பளங்களை’ அடிக்கடி சாப்பிடுவதால் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
கலர் அப்பளம் சாப்பிடுவதால் உடல்நல பாதிப்புகள்:
குறிப்பாக, செரிமானப் பிரச்சினைகள், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், நீண்ட காலத்திற்கு அதிக அளவில் உட்கொள்வது புற்றுநோய் உள்ளிட்ட தீவிர பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் இந்த வகை செயற்கை நிறமிகள் கலந்த உணவுகளை உட்கொள்வதால் ஒவ்வாமை, கவனச் சிதறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவி பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை..
எனவே, பொதுமக்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களை மட்டுமே பார்த்து உணவுப் பொருட்களை வாங்காமல், அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அப்பளங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்:
பாரம்பரிய முறையில் உளுந்து, அரிசி உள்ளிட்ட இயற்கையான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அப்பளங்களை மட்டுமே வாங்கி சாப்பிட வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அதிக அளவு செயற்கை நிறமிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ‘கலர் அப்பளங்களை’ சந்தைகள், சுற்றுலாத் தளங்கள், பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக அளவு செயற்கை நிறமிகள் பயன்படுத்தி விற்பனை செய்யப்படும் ‘கலர் அப்பளங்கள்’ உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் இதனை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.