AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவி பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை..

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளில் மாவட்டச் செயலாளர் பசுபதி ஏற்பாட்டில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவி பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Jul 2026 12:34 PM IST

ஜூலை 16, 2026: அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து மூன்றாவது இடத்துக்குச் சென்றது. இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுகவில் இரு அணிகளாகப் பிரிந்து செயல்படும் நிலை உருவானது.

அதிமுக உட்கட்சி விவகாரம்:

குறிப்பாக, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானத்தின்போது எடப்பாடி பழனிசாமி எதிராக வாக்களித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 25 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும் படிக்க: பழனி நில மோசடி விவகாரம்.. யார் அந்த பவர் சென்டர்?.. CBI விசாரணை கோரி முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் சரமாரி கேள்வி..

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தது. எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் கட்சியில் இணைந்தபோது, மன்னிப்புக் கடிதமும் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சி.வி.சண்முகம் மட்டும் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்.

சி.வி சண்முகம் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே மோதல்:

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளில் மாவட்டச் செயலாளர் பசுபதி ஏற்பாட்டில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

மேலும் படிக்க: கூடுவாஞ்சேரி பணிமனையில் பராமரிப்புப் பணிகள்.. 8 மின்சார ரயில்கள் நாளை ரத்து..

மாவட்டச் செயலாளர் பசுபதியின் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டதுடன், பசுபதியின் காரின் மீதும் கல் வீசப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்:

இந்தச் சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் 11 முக்கிய மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டக் கழக இணைச் செயலாளர் ஆனந்தி, மாவட்டப் பொருளாளர் கே.வி.என்.வெங்கடேசன், மாவட்ட இளைஞர் பாசறை – இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பாஸ்கரன், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் நடராஜன் என்ற கிருஷ்ணன், மயிலம் மேற்கு ஒன்றியச் செயலாளர் விஜயன், பொலக்கூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முண்டியம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர், திண்டிவனம் நகரச் செயலாளர் ரூபன்ராஜ் மற்றும் மயிலம் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இன்று முதல் தாங்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியிருப்பது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow Us