விவாகரத்து வழக்கு முடியும் வரை திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்த நடிகர் ரவி மோகன், அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார். ஜேஎஃப்டபிள்யூ அச்சீவர்ஸ் விருது விழாவில் பேசிய அவர், உணர்ச்சிவசப்பட்டே அந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். விழாவில் பேசிய ரவி மோகன், "இந்த ஆண்டு எனக்கு 46 வயதாகிறது. என் வாழ்க்கையின் பாதியான 23 ஆண்டுகளை சினிமாவுக்காக செலவிட்டுள்ளேன். என் சிறிய தவறான முடிவால் ரசிகர்களும், திரையுலகினரும் வருத்தமடைந்தது வேதனை அளிக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையின் உணர்ச்சிகளால் அந்த முடிவை எடுத்தேன்" என்றார். மேலும், "திரையுலகை விட்டு விலகுவதாக இனி ஒருபோதும் கூற வேண்டாம் என்று அனைவரும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களிடமும், என் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். நிச்சயமாக மீண்டும் நடிக்க வருவேன். நீங்கள் அளித்த அன்பும் நம்பிக்கையும் தான் என்னை மீண்டும் உற்சாகத்துடன் நிற்க வைத்துள்ளது" என்று உருக்கமாக பேசினார். சமீபத்தில் தனது விவாகரத்து விவகாரம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிவசப்பட்டு, விவாகரத்து முடியும் வரை நடிக்க மாட்டேன் என ரவி மோகன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.