1989ஆம் ஆண்டு வெளியான மலையாள திரையுலகின் காலத்தால் அழியாத படைப்பான 'கிரீடம்' திரைப்படம் 4K தரத்திலும் டால்பி அட்மோஸ் ஒலியுடனும் மீண்டும் வெளியாக உள்ள நிலையில், அதன் சிறப்பு திரையிடலில் நடிகர் மோகன்லால் கண்கலங்கினார். திரையிடலுக்குப் பிறகு பேசிய அவர், "48 ஆண்டுகால என் திரை வாழ்க்கையில் 'கிரீடம்' மிக முக்கியமான திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் எனக்கு முதல் தேசிய விருது அங்கீகாரம் கிடைத்தது. இயக்குநர் சிபி மலையில் நன்றிக்கடன் பட்டுள்ளேன்" என்றார். 37 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தை மீண்டும் பார்த்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக கூறிய மோகன்லால், "திரையில் தோன்றிய பல சக நடிகர்கள் இன்று நம்முடன் இல்லை. அவர்களைப் பார்த்தபோது 37 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற உணர்வு ஏற்பட்டது. அவர்களை இழந்துவிட்டோம் என்ற எண்ணம் மிகுந்த வேதனையை அளிக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்தார். லோகிததாஸ் எழுதி, சிபி மலையில் இயக்கிய இந்தப் படம், ஜூலை 11ஆம் தேதி உலகம் முழுவதும் 4K தரத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.