பழனி நில மோசடி விவகாரம்.. யார் அந்த பவர் சென்டர்?.. CBI விசாரணை கோரி முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் சரமாரி கேள்வி..
Palani Temple Land Scam: பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் வெறும் ரூ.2 கோடிக்குத் தனியாருக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில், "இதன் பின்னணியில் இருக்கும் அந்த பவர் சென்டர் யார்?" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சென்னை, ஜூலை 16: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், வெறும் ரூ.2 கோடி மதிப்பிற்குத் தனியாருக்கு முறைகேடாக மாற்றிப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பி, கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, சட்டப்படி மறுத்த சார்பதிவாளரை மாற்றிவிட்டு இமாலய ஊழல் அரங்கேற்றப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த வழக்கை உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: லஞ்சப் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!!
“Clerical Error” என மழுப்ப முயலுவதா:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.
தவறு நடந்திருப்பதை…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 15, 2026
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பழனி முருகப் பெருமானின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தையே வளைத்துப் போடும் நோக்கத்தில் இந்த மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. ஆனால், இந்த இமாலய முறைகேட்டை ஏதோ ஒரு சாதாரண எழுத்துப்பிழை (Clerical Error) போலக் காட்டி, இந்த பொய்க்கால் குதிரை அரசு மிகச் சாதாரணமாகக் கடந்து செல்ல முயல்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல” என்று சாடியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தவறு நடந்திருப்பதைச் சம்பந்தப்பட்ட அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது திட்டமிட்ட மிகப்பெரிய ஊழல் என்பது உறுதியாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரப்பதிவு விவரங்களை மறைப்பதா?
இந்த முறைகேடு தொடர்பாக அரசுக்குச் சில முக்கியக் கேள்விகளை எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார். இந்த இமாலயப் பத்திரப்பதிவு குறித்த முழுமையான விவரங்கள் ஏன் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை? யார் பெயரில் இந்த முருகன் கோவில் நிலம் மாற்றப்பட்டது? நிலத்தை முறைகேடாகத் தன் பெயருக்கு மாற்றிய அந்த நபர், இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காரியத்தை முடித்த ‘பவர் சென்டர்’ யார்?
இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான அதிகார துஷ்பிரயோகம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதலில் ஒரு சார்பதிவாளர் இந்த நிலத்தைப் பதிவு செய்ய இயலாது என்று சட்டப்படி மறுத்துள்ளார். அவ்வாறு மறுத்த சார்பதிவாளர் உடனடியாக அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, வேறு ஒரு புதிய அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகே இந்த நிலப் பத்திரப்பதிவு அரங்கேறியுள்ளது.
அப்படியென்றால், இந்த நிலப் பத்திரப் பதிவிற்காகவே அந்தப் புதிய அதிகாரி திட்டமிட்டு நியமிக்கப்பட்டாரா? சட்டப்படி மறுத்த அதிகாரியையே மாற்றும் அளவிற்குத் துணிச்சலாக அதிகாரத்தைப் பயன்படுத்திய #யார்_அந்த_Powercenter? தன் ஆட்சியில் தான் ஒருவரே பவர் சென்டர் என்று மேடைகளில் தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர் விஜய், இந்த ஊழலின் பின்னணியில் இருக்கும் அந்த உண்மையான பவர் சென்டர் யார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!
சிபிஐ விசாரணை வேண்டும்:
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிசிஐடி போலீசாரைக் கொண்டு இந்த வழக்கினை விசாரித்தால், தங்களுக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற அரசு முயலுமே தவிர, உண்மையான கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்காது என்று எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் எந்தவிதத் தலையீடும் இல்லாத ஒரு நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், அதற்குப் பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.