பொளக்கும் வெயில்.. தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை.. எத்தனை மாவட்டங்களுக்கு?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். இதன் காரணமாக வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களைத் தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 16, 2026: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, மதுரையில் 41.0 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.0 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 39.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 39.4 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.7 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 38.0 டிகிரி செல்சியஸ் மற்றும் நாகப்பட்டினத்தில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சுட்டெரிக்கும் சூரியன் – 40 டிகிரி கடந்து பதிவாகும் வெயில்:
சென்னையைப் பொறுத்தவரை, மீனம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக, வேலூரில் இயல்பை விட 6.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில பகுதிகளில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கூடுதலாக உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை:
அதே நேரத்தில், அதிக வெப்பநிலையுடன் காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால், கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப அழுத்தம் (Heat Stress) ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 16-ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை (Heat Wave) வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 17-ஆம் தேதி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எல் நினோவால் தொய்வடையும் தென்மேற்கு பருவமழை.. ஜூலை 17க்கு பின் தீவிரமடைய வாய்ப்பு..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். இதன் காரணமாக வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களைத் தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பா ?
மழையைப் பொறுத்தவரை, அடுத்த சில நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 17-ஆம் தேதிக்குப் பிறகு தென்மேற்கு பருவமழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.