எல் நினோவால் தொய்வடையும் தென்மேற்கு பருவமழை.. ஜூலை 17க்கு பின் தீவிரமடைய வாய்ப்பு..
ஜூலை 17-ஆம் தேதிக்குப் பிறகு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழையின் முன்னேற்றத்தை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்கு தேவையான முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 15, 2026: தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தொடங்கி, செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரம் வரை நீடிப்பது வழக்கம். இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழைப்பொழிவு பதிவாகும். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான பருவமழையாக இது கருதப்படுகிறது.
தென் மேற்கு பருவமழை – பலவீனமாக உள்ளது:
ஆனால், இந்த ஆண்டு வளர்ச்சி அடைந்து வரும் எல் நினோ (El Niño) தாக்கம் மற்றும் பிற வளிமண்டல காரணங்களால் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் பலவீனமாகவே இருந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் கனமழை பெய்ய வேண்டிய பகுதிகளில், தற்போது பெரும்பாலும் மிதமான மழை மட்டுமே பதிவாகி வருகிறது.
இந்த நிலை நீடித்தால், அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் கடுமையான வெப்பநிலை மற்றும் பல மாவட்டங்களில் நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜூலை 17-ஆம் தேதிக்குப் பிறகு தென்மேற்கு பருவமழை படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC Chennai) தெரிவித்துள்ளது.
பருவமழை பாதிப்புக்கான காரணங்கள்:
தற்போது, தென் தீபகற்ப இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பலவீனமாக நிலவி வருகிறது. இதற்கு, பூமத்திய ரேகையைத் தாண்டி வீசும் தென்மேற்குக் காற்று பலவீனமடைந்திருப்பதும், மேற்கு அரபிக்கடல் பகுதியில் இயல்பை விட குறைந்த வலிமையுடன் கீழ்மட்ட ஜெட் காற்று (Low-Level Jet / Somali Jet) காணப்படுவதும் முக்கிய காரணங்களாகும். இதனுடன், வளர்ச்சி அடைந்து வரும் எல் நினோ நிலையும் இணைந்து பருவமழையை பாதித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை
இதன் விளைவாக, அரபிக்கடலிலிருந்து தென் இந்தியாவுக்கு வரும் ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ளது. இதனால் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மழைப்பொழிவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
இயல்பை விட அதிக வெப்பநிலை – வெப்ப அலை எச்சரிக்கை:
மேலும், பலவீனமான பருவமழைச் சுழற்சியுடன், எல் நினோவால் உருவாகும் பரந்த அளவிலான கீழ்நோக்கி வீசும் காற்று, மேகங்கள் உருவாவதையும் தடுத்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மேகமற்ற வானம் நிலவி, சூரியக் கதிர்வீச்சு நேரடியாக தரையை அடைவதால், இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்து பதிவாகி வருகிறது.
இதனையடுத்து, உள் தமிழகத்தின் சில பகுதிகள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை (Heat Wave) எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
ஜூலை 17ஆம் தேதிக்கு பின் பருவமழை தீவிரமடையும்:
ஜூலை 17-ஆம் தேதிக்குப் பிறகு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகமூட்டம் மற்றும் மழைப்பொழிவு அதிகரிப்பதால், தரையை அடையும் சூரியக் கதிர்வீச்சின் அளவு குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது உள் தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளில் நிலவி வரும் வெப்ப அலை நிலையும் வாரத்தின் இரண்டாம் பாதியில் படிப்படியாக குறையக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழையின் முன்னேற்றத்தை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்கு தேவையான முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.