AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை

தமிழகத்தின் மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 42.5°C வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு இயல்பை விட 2-4°C வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும். திருப்பத்தூர், வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை
கோப்புப் புகைப்படம்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Jul 2026 14:41 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கடுமையான வெப்ப அலை வீசியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தமட்டில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவி வந்தது. அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதுமில்லாத போதிலும், பெரும்பாலான இடங்களில் இயல்பு வெப்பநிலையை விட 2 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையப் பகுதியில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி பொதுமக்களை வாட்டி வதைத்துள்ளது. அதே வேளையில், சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்சமாக கோவை விமான நிலையத்தில் 22.6 டிகிரி செல்சியஸும், மலைப்பிரதேசமான உதகமண்டலத்தில் 10.8 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான மழை முன்னறிவிப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாநிலத்தின் ஏனைய பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே தொடரும். வரும் ஜூலை 17ஆம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 18 முதல் 21ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை மையம் கணித்துள்ளது.

தீவிரமடையும் வெப்ப அலை மற்றும் வெப்பநிலை உயர்வு எச்சரிக்கை

வெப்பநிலையைப் பொறுத்தவரை ஜூலை 15 முதல் 17 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும். இதனால் கடலோரப் பகுதிகளில் அதிக வெப்பமும், காற்றில் அதிக ஈரப்பதமும் கலந்து தங்கி அசௌகரியமான சூழலை உருவாக்கும். குறிப்பாக ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை (Heat Wave) வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜூலை 17 அன்று விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் இந்த வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும். வரும் ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வெப்பநிலை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை நிலவரம்

தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும். காற்றில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக கடுமையான வெப்ப அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை (ஜூலை 16) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே நீடிக்கும் என்பதால் புழுக்கமான சூழல் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Follow Us