முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக தொடர்ந்த வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு..
இந்த தேர்தல் வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்தல் முறைகேடு தொடர்பான விவரங்களை நீதிபதி பதிவு செய்து கொண்டார். குறிப்பாக, வாக்காளர்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முதற்கட்ட பரிசீலனைக்கு உரியவை எனக் கருதி, வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.
ஜூலை 15, 2026: வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பிரிட்ஜ் வாங்குவதற்கான கூப்பன்களை வழங்கி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான சி. விஜயபாஸ்கர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், 1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சி. விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கு:
அவரை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்ட முருகேசன் 43,700 வாக்குகள் பெற்ற நிலையில், சி. விஜயபாஸ்கர் 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கே.கே. செல்லப்பாண்டியன், தனது தேர்தல் முகவர் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது சி. விஜயபாஸ்கர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பல்வேறு வகையான கூப்பன்களை வழங்கி வாக்குகளைப் பெற முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாக்காளர்கள் தமக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல், வீட்டு உபயோகப் பொருளான பிரிட்ஜ் வாங்குவதற்கான சிறப்பு கூப்பன்களும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்:
இவ்வாறு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதற்கான கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் முறைகேடாகும் என்றும், இதன் மூலம் தேர்தல் நடைமுறைகள் பாதிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். எனவே, சி. விஜயபாஸ்கரின் தேர்தல் வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும், விராலிமலை தொகுதி தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு:
இந்த தேர்தல் வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்தல் முறைகேடு தொடர்பான விவரங்களை நீதிபதி பதிவு செய்து கொண்டார். குறிப்பாக, வாக்காளர்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முதற்கட்ட பரிசீலனைக்கு உரியவை எனக் கருதி, வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி என். செந்தில்குமார், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.