வீ தி லீடர்ஸ் அமைப்பின் திருச்செந்தூர் மாநாடு திடீர் ரத்து.. காரணம் என்ன.. அண்ணாமலை வெளியிட்ட முக்கிய தகவல்!
We The Leaders Organization Conference Cancelled : தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருந்த அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் மாபெரும் மாநாடு ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன. அமைப்ப சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்.
தமிழக பாஜகவில் முன்னாள் மாநில தலைவராக இருந்து வந்த அண்ணாமலை திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் முதல் மாநாடு கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆட்சிப்பட்டியில் ” போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு” என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 12- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ” சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு” வருகிற ஜூலை 26- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், திருச்செந்தூரில் நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாக வீ த லீடர்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வீ தி லீடர்ஸ் அமைப்பின் திருச்செந்தூர் மாநாடு ரத்து
வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் திருச்செந்தூரில் ஜூலை 26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மாநாடானது சில காரணங்களால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அடுத்த மாதம் ஆகஸ்ட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி இயற்கை மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு சார்ந்த மாபெரும் சமூக நிகழ்ச்சிகள் இதே தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யைச் சந்தித்த சிபிஎம் சண்முகம்.. தவெக அமைச்சரவையில் இடமா? என்ன சொல்கிறார்?




தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த முழு விவரங்கள் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன. மாற்றத்தை நோக்கி நம்மோடு பயணிக்கும் அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் நன்றி என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் செயல்பட்டு வந்த அண்ணாமலை திடீரென அந்த கட்சியில் இருந்து அதிரடியாக விலகுவதாக அறிவித்தார். அத்துடன், கடந்த ஜூன் 5- ஆம் தேதி வீ தி லீடர்ஸ் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில், தற்போது வரை சுமார் 20 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் வீ தி லீடர்ஸ் அமைப்பு போட்டி
இந்த எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டும் நிலையில், இந்த அமைப்பு கட்சியாக மாற்றப்பட்டு 2029 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதற்கு முன்னோட்டமாகவே, கோவையில் மாபெரும் மாநாட்டை நடத்தி முடித்து இருந்தார். இதை தொடர்ந்து, திருச்செந்தூரில் மாநாடு நடைபெற உள்ளதாக அந்த மேடையில் அண்ணாமலை தெரிவித்து இருந்த நிலையில் தற்போது, இந்த மாநாடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “என்னை இணைப்பதற்கு அவர்கள் யார்?”… பாமகவில் அடுத்த சலசலப்பு.. அவசரக் கூட்டம் கூட்டும் முன்னாள் எம்.எல்.ஏ அருள்!