முதல்வர் விஜய்யைச் சந்தித்த சிபிஎம் சண்முகம்.. தவெக அமைச்சரவையில் இடமா? என்ன சொல்கிறார்?
TVK Cabinet: தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஒருபோதும் இடம் பெறாது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பே. சண்முகம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கம்யூனிஸ்ட் தோழர்கள் அமைச்சர்களாகும் காலம் நெருங்குகிறது என்று சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேசியதற்கு விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை 15: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டெல்லி பாபு மற்றும் தேனி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது விவசாய மக்கள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெ.சண்முகம், முதலமைச்சரிடம் பேசிய விவகாரங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இதையும் படிக்க: ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெறும் தவெக நிர்வாகி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. அதிரடி விளக்கம்!!
தவெக அமைச்சரவை சர்ச்சை: திட்டவட்ட மறுப்பு
அண்மையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், “சூழல் வரும்போது கம்யூனிஸ்ட் தோழர்கள் அமைச்சர்களாக வருவார்கள்; அந்த காலம் நெருங்குகிறது” என்று தவெக அமைச்சரவையில் பங்கேற்பது போன்ற ஒரு தொனியில் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இது குறித்து விளக்கமளித்த பெ.சண்முகம், “தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் இடம் பெறாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடதுசாரி கட்சிகள் தவெக அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று ஏற்கனவே முறைப்படி அறிவித்திருந்தோம்; இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மு. வீரபாண்டியன் எதன் அடிப்படையில் அப்படிப் பேசினார் என்று இன்று அவரிடம் விளக்கம் கேட்பேன்” என்றார்.
முதலமைச்சரிடம் முக்கிய கோரிக்கைகள்:
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 கிராமங்களில் இருந்த கோயில் நிலங்கள் தொடர்பான பத்திரப்பதிவுத் தடையை நீக்கி, கடந்த ஜூலை 9ஆம் தேதி புதிய அரசாணை வெளியிட்ட அரசுக்கு சிபிஎம் பாராட்டு தெரிவித்தது. மேலும், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் தவறான பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘தனி ஆணையம்’ அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், களக்காடு முண்டந்துறை, மேகமலை புலிகள் சரணாலய மக்கள் ஆகஸ்ட் 28க்குள் வெளியேற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாக ‘மறுசீராய்வு மனு’ தாக்கல் செய்ய வேண்டும் என சண்முகம் கேட்டுக்கொண்டார்.
15 ஆண்டுகாலப் பெயர் மாற்றப் போராட்டம்:
விருதுநகர் மாவட்டத்தில் ‘பரைச்சேரி’ என்று நீடிக்கும் அரசு ஆவணப் பெயரை, மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ‘வடக்கு அச்சம் தவிழ்த்தான்’ என உடனடியாக மாற்ற வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.
சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை 25 ஆண்டுகளுக்குப் பிரான்ஸ் நாட்டின் பன்னாட்டு நிறுவனமான ‘சூயஸ்’ அமைப்பிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.
சிறை மரணம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்:
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கொல்லப்பட்ட வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்குப் பாராட்டு தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர் மனைவிக்கு அரசு வேலை வழங்கவும், தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களின் ஒப்பந்த முறையை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…
அரசியல் நிலைப்பாடுகள்:
சேலம் அம்பேத்கர் சிலை விவகாரத்தில் சாதிய பாகுபாடின்றி சிலை திறக்கப்பட வேண்டும் என்றும், எம்.எல்.ஏ-க்கள் குறுகிய காலத்தில் பதவி விலகும் குதிரை பேர அரசியலை மக்கள் எதிர்க்க வேண்டும் என்றும் சண்முகம் சாடினார். மேலும், தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று மு. வீரபாண்டியன் விடுத்த கோரிக்கையையும் முன்மொழிந்த அவர், உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்துத் தேர்தல் நெருங்கும்போது முறைப்படி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறினார்.