‘ஆபரேஷன் தூஃபான்’ திட்டம்.. முதல்வர் விஜய்யுடன் கேரள உள்துறை அமைச்சர் திடீர் சந்திப்பு!
Operation Toofan: தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் கேரள அரசின் 'ஆபரேஷன் தூபான்' திட்டம் குறித்து, கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை, ஜூலை 15: தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் கேரள அரசின் ‘ஆபரேஷன் தூபான்’ (Operation Toofan) திட்டம் தொடர்பாக, கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோனை மேற்கொண்டார். இதனால் தலைமைச் செயலக வட்டாரம் இன்று பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…
இரு மாநிலங்களும் இணைந்து செயல்படுவது அவசியம்:
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, “போதைப்பொருள் ஒழிப்புக்குத் தமிழகத்தின் ஒத்துழைப்பு மிகவும் தேவை. இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களும் இணைந்து செயல்படுவது அவசியமாகும்” என்று குறிப்பிட்டார். மேலும், இந்தத் திட்டத்திற்குத் தமிழ்நாட்டின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் தூபான் திட்டம் என்றால் என்ன?
கேரள மாநிலத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக, குறிப்பாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ‘சிந்தெடிக்’ வகை போதைப்பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்காக இந்தத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் கேரள காவல் துறையினரால் இந்த ‘ஆபரேஷன் தூபான்’ திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
அண்டை மாநிலங்களில் இருந்து கேரளாவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லைச் சோதனைச் சாவடிகளில் தீவிர தணிக்கை நடத்தப்படுகிறது. சுற்றுலாப் பேருந்துகள், தங்கும் விடுதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்கள் போதைப்பொருள் அல்லது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை அறிய தீவிர சோதனை நடத்தப்படுவதோடு, பள்ளி வளாகங்களைச் சுற்றிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைப்பு:
இந்த ஆபரேஷன் தூபான் திட்டத்தின் கீழ் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே அண்டை மாநிலக் காவல் துறைகளுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை உடைக்க உளவுத் தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கேரளா சென்று ஆபரேஷன் தூபான் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
இதையும் படிக்க: ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெறும் தவெக நிர்வாகி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. அதிரடி விளக்கம்!!
முதலமைச்சருடன் கேரள அமைச்சர் சந்திப்பு:
இந்தத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், இரு மாநிலக் கூட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அவரை அமைச்சர் செங்கோட்டையன் வரவேற்று அழைத்துச் சென்றார். தொடர்ந்து, அங்கு அவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, தென்னிந்திய மாநிலங்களின் ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.