அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசும்போது, திமுகவும் அதிமுகவும் 'கூட்டுக் களவாணிகள்' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வகிக்கும் பதவிக்கு இதுபோன்ற பேச்சு சரியானதா என்பதை யோசிக்க வேண்டும். அதிமுக கூட்டுக் களவாணி அல்ல. அதிமுக எம்.எல்.ஏ.க்களை திருடும் முதலமைச்சர் விஜய்தான் களவாணி. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யாமல் தனது கட்சியில் இணைத்ததுதான் உண்மையான களவாணித்தனம் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஜூலை 14, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஒரு நான்காம் தர பேச்சாளர் போல பேசுகிறார் என்றும், அவர் வகிக்கும் பதவிக்கு இதுபோன்ற பேச்சு சரியானதா என்பதை யோசிக்க வேண்டும் என்றும், “களவாணி” விஜய்தான் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: “ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் கட்சி அதிமுகதான்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் முக்கியமான தீர்ப்பைப் பெற்றுத் தந்தோம். ஆண்டுதோறும் கர்நாடக அரசு 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை பெற்றுத் தந்தது அதிமுக அரசு. தற்போது அந்த உரிமைக்கே குந்தகம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
முதல்வர் விஜய் தான் களவாணி:
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசும்போது, திமுகவும் அதிமுகவும் ‘கூட்டுக் களவாணிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வகிக்கும் பதவிக்கு இதுபோன்ற பேச்சு சரியானதா என்பதை யோசிக்க வேண்டும். அதிமுக கூட்டுக் களவாணி அல்ல. அதிமுக எம்.எல்.ஏ.க்களை திருடும் முதலமைச்சர் விஜய்தான் களவாணி. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யாமல் தனது கட்சியில் இணைத்ததுதான் உண்மையான களவாணித்தனம்.
மேலும் படிக்க: திமுக அரசு தொடங்கிய அகழாய்வு பணிகளை இந்த அரசும் தொடர வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..
இந்த அரசு பொறுப்பேற்று 60 நாட்கள் ஆகிறது. இந்த 60 நாட்களில் என்ன செய்துள்ளது? ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை:
கூட்டணிக் கட்சித் தலைவர்களை அனுசரிக்கும் வரையில்தான் தமிழக வெற்றிக் கழக ஆட்சி நீடிக்கும். தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பிறகு வேறு ஒரு பேச்சு பேசுகின்றனர். திமுக – அதிமுக கூட்டணி என்ற பேச்சு முற்றிலும் கட்டுக்கதை. திமுக ஒரு தீய சக்தி என்பதுதான் எங்களது நிலைப்பாடு.
தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்து சிலர் அங்கு சென்றனர். ஆனால், அவர்களுக்கு முதலமைச்சர் விஜய் பெரிய அல்வாவை கிண்டிக் கொடுத்துவிட்டார்.
காங்கிரஸின் நிலை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது. தொடர்ந்து பலருக்கு அரசு பதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் சிறிது நாட்களில் விஜயின் மேக்கப் மேனுக்கும் அரசு பதவி வழங்கப்படும்” என எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.