AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

C Vijayabaskar: விராலிமலை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்குப் பரிசு கூப்பன்கள் மற்றும் இலவச குளிர்சாதனப் பெட்டி டோக்கன்கள் விநியோகித்து முறைகேடாக வெற்றி பெற்றதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

தேர்தல் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சி.விஜயபாஸ்கர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Jul 2026 12:32 PM IST

சென்னை, ஜூலை 15: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பண மதிப்புள்ள பரிசு கூப்பன்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டி வழங்குவதற்கான கூப்பன்களை விநியோகித்து முறைகேடாக வெற்றி பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சி.விஜயபாஸ்கர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் முழுமையான விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க: ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெறும் தவெக நிர்வாகி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. அதிரடி விளக்கம்!!

தேர்தல் முடிவும் பின்னணியும்:

கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அவர் மொத்தம் 1,05,773 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முருகேசனை விட 64,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சி.விஜயபாஸ்கர் மாபெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு:

சி.விஜயபாஸ்கரின் இந்த வெற்றியை எதிர்த்து, அதே விராலிமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த வேட்பாளரான கே.கே.செல்லபாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘தேர்தல் வழக்கு’ ஒன்றைச் சமர்ப்பித்தார். அந்த மனுவில் அவர் பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதன்படி, தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாக்காளர்கள் தனக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள டோக்கன்கள் அல்லது கூப்பன்களை சி.விஜயபாஸ்கர் தரப்பினர் விநியோகித்தனர்.

இலவச பிரிட்ஜ் டோக்கன்:

வாக்காளர்களைக் கவரும் வகையில் இலவசமாக ‘பிரிட்ஜ்’ பெற்றுக் கொள்வதற்கான பிரத்யேக கூப்பன்களையும் வழங்கி பெரும் தேர்தல் முறைகேடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார். எனவே, முறைகேடுகள் மூலம் பெறப்பட்ட சி.விஜயபாஸ்கரின் இந்த வெற்றிச் சான்றிதழை ‘செல்லாது’ என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும், தோல்வியடைந்த தன்னை விராலிமலை தொகுதியின் அதிகாரப்பூர்வ வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கே.கே.செல்லபாண்டியன் தனது மனுவில் கோரியிருந்தார்.

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:

இந்தத் தேர்தல் வழக்கு மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் முன்பாக விரிவான விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டதற்கான முறைகேட்டு ஆதாரங்களை முன்வைத்து வாதிட்டனர். மனுவை முழுமையாகப் பரிசீலித்த நீதிபதி செந்தில்குமார், இந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். மேலும், இந்த அடுக்கடுக்கான தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து எதிர்மனுதாரர்களான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய இரு தரப்பும் மூன்று வாரங்களுக்குள் தங்களது விரிவான விளக்கத்தை அல்லது பதிலை மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…

வழக்கின் தற்போதைய நிலை:

இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள சூழலில், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த சி.விஜயபாஸ்கர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ‘தமிழக வெற்றிக் கழகம்’கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதியாகத் தொடர்வதற்கான தகுதிநீக்க நடவடிக்கைகள் போன்ற சட்டப்பூர்வ பாதிப்புகள் தற்போதைய நிலையில் அவர் மீது பாய வாய்ப்பில்லை என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் என்பதால், நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் முறையாகப் பதிவு செய்து, இந்த வழக்கை இறுதித் தீர்ப்பை நோக்கி நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us