பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு – சமாதானம் பேச அழைத்து வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்
கோவை இடிகரை டாஸ்மாக் கடை அருகே, நண்பனுக்காகச் சமாதானம் பேசச் சென்ற வாலிபரை பீர் பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இரண்டு வாலிபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜூன் 10 : கோவை, கோவிந்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரின் நண்பர் அசோக் என்பவரை, சென்னமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முகேஷ் (23) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து ராஜ்குமார், முகேஷைத் தொடர்பு கொண்டு நியாயம் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குற்றவாளிகள் முகேஷ், கடந்த ஜூன் 6, 2026 அன்று இரவு ராஜ்குமாரை போனில் தொடர்புகொண்டு, இடிகரை டாஸ்மாக் கடை அருகே நேரில் வந்தால் சமாதானம் பேசிக்கொள்ளலாம் என சதித்திட்டத்துடன் அழைத்து உள்ளார்.
சமாதானம் பேச அழைத்து வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்
இதனை நம்பி அன்று இரவு சுமார் 9:15 மணி அளவில் ராஜ்குமார் இடிகரை டாஸ்மாக் கடை அருகே சென்ற போது, அங்கு கார்த்திகேயன் (25) என்பவருடன் தயாராகக் காத்து இருந்த முகேஷ், ராஜ்குமாரை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்து உள்ளார். “உனது நண்பன் அசோக்குடன் சேர்ந்து கொண்டு என்னைப் பற்றி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் பார்க்கிறாயா ?” எனக் கூச்சலிட்டவாறே, தான் கையில் வைத்து இருந்த பீர் பாட்டிலால் ராஜ்குமாரின் நடுமண்டையில் ஓங்கி அடித்து உள்ளார்.
இதையும் படிக்க : சென்னையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்? ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு!




இதில் பலத்த ரத்தக் காயம் அடைந்த ராஜ்குமார் அலறி உள்ளார். சத்தம் கேட்டு சுற்றி இருந்த பொதுமக்கள் ஓடி வருவதைக் கண்ட இருவரும், “இனிமேல் என் விஷயத்தில் தலையிட்டால் உன்னை இந்த பீர் பாட்டிலாலேயே குத்திக் கொலை செய்து விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். இதை அடுத்து, ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜ்குமார் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அவசரச் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
பின்னர், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடிகரை டாஸ்மாக் பகுதியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு ஜூன் 7-ஆம் தேதி மதியம் நேரில் ஆஜராகி, நடந்த கொடூர சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இதையும் படிக்க : “சட்டம் – ஒழுங்கு பரபரப்புக்கு மத்தியில் கலகல சம்பவம்” இரு பெண்களுடன் வாழ விருப்பம்.. திண்டுக்கல் காவல் நிலையத்தில் இளைஞர் பிடிவாதம்!
அதன் பேரில், ராமநாதபுரம் கமுதி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முகேஷ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள இந்த இரட்டை குற்றவாளிகளை வலைவீசித் தேடும் பணியில் போலீசார் தற்போது தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதோடு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதவாரு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.