கோவையில் திருடப்பட்ட வெண்கல விநாயகர் சிலை.. திருடனை மடக்கிப் பிடித்த அர்ச்சகர்கள்..!
கோவை அருகே உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில், நள்ளிரவில் புகுந்து வெண்கல விநாயகர் சிலையைத் திருடிச் செல்ல முயன்ற நபர் ஒருவரை, அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கையும், களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் உள்ளூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில், நேற்று (ஜூன் 9) இரவு சுமார் 8:30 மணியளவில், மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் சந்தேகப்படும் படியாக நுழைந்த நபர் ஒருவர், அங்கு இருந்த சுமார் ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள, ரூ.50,000 மதிப்பிலான வெண்கல விநாயகர் சிலையைத் திருடி உள்ளார். பின்னர், யாரும் பார்க்காதவாறு அந்தச் சிலையை ஒரு வெள்ளை நிற உரைப்பையில் மறைத்து வைத்துக் கொண்டு, கோவிலில் இருந்து நைசாக நழுவ முயன்று உள்ளார்.
ALSO READ: வாரவிடுமுறை நாள்கள்.. சென்னை டூ சொந்த ஊர் செல்ல திட்டமா? அரசு சிறப்பு பேருந்துகள் ரெடி!
அப்போது, எதிரியின் அசைவுகளில் சந்தேகம் அடைந்த கோவில் அர்ச்சகர்கள், சம்பவ இடத்திற்கு வந்த ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த புகார்தாரர் சதாசிவம் (68) மற்றும் குமாரசாமி ஆகியோர் துரிதமாகச் செயல்பட்டு, அந்த ஆசாமியைச் சுற்றிலும் வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
திருடப்பட்ட விநாயகர் சிலை:
அவரது பையைச் பார்த்த போது, அதற்குள் திருடப்பட்ட விநாயகர் சிலை இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக பொதுமக்கள், இரவு 10:30 மணி அளவில் குற்றவாளியையும் மீட்டெடுக்கப்பட்ட சிலையையும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபர் சங்கனூர் சாலையைச் சேர்ந்த நடராஜன் (54) என்பதை தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
ALSO READ: 5 தொகுதி இடைத்தேர்தல்.. தேர்தல் அலுவலர்கள் நியமனம்.. விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு!
காவல் நிலையத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலை மேற்குப் பகுதியில் அமைந்து உள்ள இந்த புகழ்பெற்ற கோவிலில், குற்றப் பின்னணி கொண்ட நபர் துணிகரமாகச் சிலை திருட்டில் ஈடுபட்டதும், அது உடனடியாக முறியடிக்கப்பட்டதும் காவல் துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பான பேசுபொருளானது. கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.