வாரவிடுமுறை நாள்கள்.. சென்னை டூ சொந்த ஊர் செல்ல திட்டமா? அரசு சிறப்பு பேருந்துகள் ரெடி!
Special Buses Operated: தமிழகத்தில் வார விடுமுறையையொட்டி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் வருகிற ஜூன் 12- ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. இதேபோல, சொந்த ஊரில் இருந்து திரும்புவதற்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 4- ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால், ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு படையெடுத்தனர். இந்த நிலையில், வார விடுமுறை நாட்களையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வருகிற 12- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) 13- ஆம் தேதி ( சனிக்கிழமை) 14- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு 605 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து 110 சிறப்பு பேருந்துகள்
இதேபோல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, ஓசூர், நாகப்பட்டினம், பெங்களூர், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 110 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், பெங்களூரு, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 20 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “மக்கள் ஏமாந்துட்டாங்க.. இன்னும் 6 மாசத்துல பாருங்க”.. முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொந்தளிப்பு!!




சொந்த ஊர்களில் இருந்து வெளியூர் திரும்பவும் சிறப்பு பேருந்துகள்
இதே போல, வார விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு திரும்ப வசதியாக தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வார விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்வதற்காக தற்போது வரை சுமார் 18 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த பேருந்துகளில் பயணிப்பதற்கு www.tnstc.nin.in இணையதளம் அல்லது tnstc மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சிறப்பு பேருந்துகள் அறிவித்து இயக்கம்
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வார விடுமுறை, முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை ஆகிய தினங்களில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, தற்போது வார விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: நாளை நடக்கும் நிதி ஆயோக் கூட்டம்.. 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்ற முதல்வர் விஜய்..