“மக்கள் ஏமாந்துட்டாங்க.. இன்னும் 6 மாசத்துல பாருங்க”.. முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொந்தளிப்பு!!
அதிமுகவினரைப் பார்த்தால் இப்போது மிகவும் பாவமாக இருக்கிறது. ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைகளில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை அமைச்சர்களாகப் பவனி வந்தவர்கள், தங்களுக்கு அரசியல் முகவரி கொடுத்த கட்சியின் மரபைக் காக்காமல், தற்போதைய ஆளுங்கட்சியின் கேட் வாசலில் நாய் போலக் காத்துக்கிடப்பதாக விமர்சித்தார்.
ஸ்ரீபெரும்புதூர், ஜுன் 10: இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள், தங்களை ஏமாற்றிய சட்டமன்ற உறுப்பினர்களை அந்தந்த ஊர் மக்களே துரத்தி அடிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில், திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது தற்போதைய தமிழக அரசு மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ஆவேசமாக உரையாற்றினார். அவ்வாறு, கூட்டத்தில் பேசிய தா.மோ.அன்பரசன், தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாகச் சாடினார்.
இதையும் படிக்க: பாசிசத்தின் மற்றொரு Version.. ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் சோபா மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..
ஏமாந்து ஓட்டுப் போட்ட மக்கள்:
“தமிழ்நாட்டில் ஆண்டுக்குச் சராசரியாக 7 லட்சம் பதிவு பெற்ற திருமணங்கள் ரிஜிஸ்டர் ஆபீஸில் நடைபெறுகின்றன. தற்போதைய அரசு அறிவித்துள்ளபடி, ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு சவரன் தங்கம், பட்டுப்புடவை மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு 2 கிராம் தங்கம் வழங்க வேண்டுமானால் அதற்கு மிகப் பெரும் நிதி தேவைப்படும். தமிழகத்தின் மொத்த வருவாயே 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் தான். ஆனால், முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள திட்டங்களைச் செயல்படுத்த 12 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இந்த நிதியை எங்கியிருந்து கொண்டு வந்து கொடுப்பார்? மக்கள் ஏமாந்து ஓட்டுப் போட்டுவிட்டார்கள்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
துறையே தெரியாத அமைச்சர்கள்:
புதிய அமைச்சரவையின் செயல்பாடுகளைக் கிண்டல் செய்த அவர் சில உதாரணங்களைக் குறிப்பிட்டார். கோயம்புத்தூரில் ஒரு அமைச்சர் தனக்கு ‘சுற்றுலாத் துறை’ வழங்கியதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவிக்கிறார். ஆனால், பக்கத்தில் இருப்பவர் அது சுற்றுலாத் துறை அல்ல ‘சுற்றுச்சூழல் துறை’ எனத் திருத்துகிறார். தனக்கு என்ன துறை ஒதுக்கப்பட்டது என்றே அமைச்சருக்குத் தெரியவில்லை. மற்றொரு அமைச்சர் திருச்செந்தூரில் முறுக்குக் கடையில் ஆய்வு செய்து, முறுக்குத் தயாரிப்பு தேதி குறித்து விநோதமான கேள்விகளைக் கேட்கிறார். இத்தகைய செயல்பாடுகளால் அரசு அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்று சாடினார்.
ஆறு மாதங்களில் மக்கள் துரத்துவார்கள்:
நமது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிற்காக இரவும் பகலும் உழைத்தார். அந்தச் சாதனைகளை மறந்து மக்கள் ஏமாந்து ஓட்டுப் போட்டுவிட்டனர். ஆனால் இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள், தங்களை ஏமாற்றிய சட்டமன்ற உறுப்பினர்களை அந்தந்த ஊர் மக்களே துரத்தி அடிப்பார்கள் என்று எச்சரித்தார்.
அதிமுகவினர் மீதான கடுமையான சாடல்
அதிமுகவினரின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், அதிமுகவினரைப் பார்த்தால் இப்போது மிகவும் பாவமாக இருக்கிறது. ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைகளில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை அமைச்சர்களாகப் பவனி வந்தவர்கள், தங்களுக்கு அரசியல் முகவரி கொடுத்த கட்சியின் மரபைக் காக்காமல், தற்போதைய ஆளுங்கட்சியின் கேட் வாசலில் நாய் போலக் காத்துக்கிடக்கிறார்கள். கேட் எப்போது திறக்கும், எப்போது உள்ளே ஓடலாம் என்று முன்னாள் அமைச்சர்கள் தவம் கிடக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது மிகுந்த பரிதாபமாக இருக்கிறது” என்று மிகக் கடுமையான சொற்களால் விமர்சித்தார்.
இதையும் படிக்க: போதை ஊசி செலுத்திய இளம்பெண் பலி.. காதலன் உட்பட இருவர் கைது.. திருச்சியில் பயங்கரம்!!
தொண்டர்களுக்கு அழைப்பு:
இறுதியாகத் திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், “திமுக தொண்டர்கள் எப்போதுமே தொய்வடைந்து போகமாட்டார்கள். வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, எதிரிகளை வீழ்த்த இன்றிலிருந்தே நாம் வேகத்தோடு தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும்” என்று கூறினார்.