பாசிசத்தின் மற்றொரு Version.. ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் சோபா மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..
Udhayanidhi on TVK Government: தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து மூன்று தனியார் செய்தி சேனல்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
ஜூன் 10, 2026: தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து மூன்று தனியார் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக்கழக அரசை கடுமையாக விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுவருகிறது. தொடர்ந்து மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின்தடை நீடிப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெப்பம் அதிகரித்துள்ள சூழலில் மின்வெட்டு காரணமாக மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு செய்தி சேனல்கள் தொடர்ந்து செய்திகளை ஒளிபரப்பி வந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து மூன்று தனியார் செய்தி சேனல்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
செய்தி சேனல்கள் நீக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம்:
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச்…
— Udhay (@Udhaystalin) June 9, 2026
“தமிழ்நாட்டில் சோபா மாடல் அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக ‘என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க’ என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு.
மேலும் படிக்க: போதை ஊசி செலுத்திய இளம்பெண் பலி.. காதலன் உட்பட இருவர் கைது.. திருச்சியில் பயங்கரம்!!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஊடக சுதந்திரம் தொடர்பான விவாதங்களும் தற்போது மீண்டும் எழுந்துள்ளன. அரசை விமர்சிக்கும் செய்திகளை ஒளிபரப்பியதற்காக சேனல்கள் முடக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்ப மற்றும் நிர்வாக காரணங்களா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.