உதகையில் வீடுகளின் மீது ஏறி உலா வரும் கரடி.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!
குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி உள்ள தேயிலைத் தோட்டங்களில் இருந்து வெளியேறும் இந்தக் கரடி, பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்தை விளைவிக்குமோ என்ற அச்சம் அந்த வட்டாரத்தில் தொற்றிக் கொண்டு உள்ளது. தொடர்ந்து மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இவ்வாறு வனவிலங்குகள் உலா வருவதால், எப்போது என்ன நடக்குமோ ? என்ற பீதியில் கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எடக்காடு நடுஹட்டி கிராமப் பகுதிகளில், மாலை மற்றும் இரவு நேரங்களில் கரடி ஒன்று ஊருக்குள் புகுந்து வீடுகளின் மீது சர்வ சாதாரணமாக உலா வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது. உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட மலைப் பிரதேச பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இந்த எடக்காடு நடுஹட்டி பகுதியில் மாலையானாலே கரடி நடமாட்டம் என்பது வாடிக்கையாகி விட்டது. நேற்று மாலை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த இந்தக் கரடி, அங்கு உள்ள வீடுகளின் மேற்கூரைகள் மீது ஏறி உலா வந்து உள்ளது.கரடியின் இந்த விபரீத உலாப் பயணத்தை, அங்கு இருந்த உள்ளூர் பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன்களில் பதிவு செய்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
