பாஜகவின் அலிஷா அப்துல்லா சர்ச்சை வீடியோ விவகாரம்.. பிரபல யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் கைது!
YouTuber Mukthar Arrested : பாஜகவை சேர்ந்த அலிஷா அப்துல்லா என்பவர் குறித்து சர்ச்சையான வீடியோவை வெளியிட்டதாக அளித்த புகாரின் பேரில், பிரபல யூடியூபர் முக்தார் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். இதில், ஏற்கெனவே, திருச்சி சிவா கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளராக இருந்து வருபவர் அலிஷா அப்துல்லா. இவர், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியன் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மீது பரபரப்பு புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக அலிஷா அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் ஈடுபட்டேன். அப்போது, முக்தாரும், திருச்சி சூர்யாவும் என்னை அவதூறாக பேசினார்கள். ஆனால், அவர்கள் மீது எந்த விதமான விமர்சனம் மற்றும் நடவடிக்கையை நான் எடுக்கவில்லை. ஆனால், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர்கள் வெளியிட்ட ஒரு வீடியோவில் எனது இரட்டை குழந்தைகள் குறித்து பேசி இருந்தனர்.
இரட்டை குழந்தை குறித்து சர்ச்சையான வீடியோ
அதில், ஒரு குழந்தை எனது முக சாயலில் இருப்பது போன்றும், மற்றொரு குழந்தை அண்ணாமலை மாதிரி இருப்பது போன்றும் புகைப்படத்தை வைத்து பதிவிட்டிருந்தனர். இதை பார்த்த நான் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன் அவர்கள் மீது ஆத்திரம் ஏற்பட்டது. எனவே, இந்த விவகாரத்தை நான் சும்மா விட மாட்டேன். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்றால் நான் வேறு மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலினை முக்தார் சந்தித்து உள்ளார்.
மேலும் படிக்க: பெண்கள் மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை… முதல்வர் விஜய் விடுத்த கடும் எச்சரிக்கை!




சென்னை காவல் ஆணையரகத்தில் புகார்
அப்போது, அவருக்கு யார் ஆதரவாக இருக்கிறார் என்று பாருங்கள். இந்த விவகாரத்தில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு பிரபல யூடியூபர் முக்தார் மீதும், திருச்சி சூர்யா மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். மேலும், சென்னை கமிஷனரிடம் 10 நிமிடங்கள் பேசி இருக்கிறேன். இந்த புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.
பிரபல யூடியூபர் முக்தார் கைது
இந்த நிலையில், அண்மையில் திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, பிரபல யூடியூபர் முக்தாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் வைத்து முக்தாரை போலீசார் கைது செய்ததாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையில் 2500 புதிய பணியிடங்கள்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!