பெண்கள் மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை… முதல்வர் விஜய் விடுத்த கடும் எச்சரிக்கை!
CM Vijay Latest Speech: தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொந்தரவு செய்தால் அதனை சகித்துக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறு தொந்தரவில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படை தொடங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூன் 9) நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்று சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பூஜ்ஜியம் அளவுக்கு இருக்க வேண்டும். சொன்னதை அனைத்தையும் செய்வோம். இதனை படிப்படியாக செயலில் கொண்டு வருவோம். இதன் காரணமாகவே ஆட்சிக்கு வந்த குறைந்த நாட்களில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்கள் கலங்குகிறது நெஞ்சம் பதறுகிறது
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பார்த்தால் கண்கள் கலங்குகிறது. நெஞ்சம் பதறுகிறது. போதை பொருள்களால் இந்த சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் நடக்கிறது. எதற்காக நடக்கிறது என்பதை மற்றவர்களை போல ரிலீஸ், இன்ஸ்டாகிராமில் தேடிக் கொண்டிருக்க முடியாது. ரியாலிட்டியில் தான் புரிந்து கொள்ள முடியும். பல வருடங்களாக போதைப்பொருள் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதன் காரணமாகவே இவ்வளவு பிரச்சனை எழுந்துள்ளது. இதற்கு காரணம் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அதை பற்றி பேசி பயனில்லை.
மேலும் படிக்க: மது போதையில் அரக்கனாக மாறிய அண்ணன்.. சென்னையில் தூங்கிக்கொண்டிருந்த தம்பி அடித்து கொலை.. பதறவைக்கும் பின்னணி!
சட்டம்- ஒழுங்கில் தனி மனித ஒழுக்கம் தேவை
எனவே போதை பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அவ்வாறு ஒழித்தால் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ள முடியாது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. சமூக ஒழுங்கு, தனிமனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டுள்ளது. தனி மனிதன் ஒழுங்காக இருந்தால் சமூக ஒழுங்கு மாறும். பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பி விடலாம் என்று நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
பெண்களை தொந்தரவை செய்வதை சகித்துக் கொள்ள முடியாது
பெண்களை தொந்தரவு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான தண்டனை உறுதியாக பெற்றுத் தரப்படும். அதற்கான நடவடிக்கைகள் காவல்துறை தரப்பில் வேகமாக முன்னெடுக்கப்படும். இதில், நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை பார்த்து மற்றவர்கள் இது போன்ற குற்றங்களில் ஈடுபட பயப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: சிங்கப்பெண் அதிரடிப்படை – துவங்கி வைத்த முதல்வர் விஜய்