ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் – மீண்டும் கடைகள் திறப்பு
டாஸ்மாக் அதிகாரிகள் காலி பாட்டில்களை திரும்ப பெற ஒரு மாதம் அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 3 நாட்களாக தொடர்ந்து வந்த பிரச்னை முடிவுக்கு வருகிறது.
சென்னை, மே 28 : தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பபெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கும்போது கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும். பின்னர் வாங்கிய கடையிலேய பாட்டிலை திரும்ப அளித்தால் மீண்டும் வாடிக்கையாளரிடமே ரூ.10 திருப்பி அளிக்கப்பட்டும். இது தங்களுக்கு கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்துவதாகவும், எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்டாத நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த மே 25, 2026 அன்று முதல் டாஸ்மாக் கடையை திறக்காமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
இந்த நிலையில் அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காலி பாட்டில்களை திரும்ப பெற ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முன்னதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் காலி மது பாட்டில்களை கையாளுவதில் தற்போது நடைமுறையில் உள்ள சிக்கலான மற்றும் சிரமமான வழிமுறைகளைத் தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : 43 ஆகக் குறைந்த அதிமுக பலம்… உட்கட்சி பூசலால் 4 MLAக்கள் இழப்பு.. 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!




இந்த போராட்டம் 4வது நாளாக மே 28, 2026 அன்றும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில் டாஸ்மாக் அதிகாரிகள் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கண்டிப்பாக காலி பாட்டில்களை வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சில இடங்களில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகில் 500 மீ தூரத்துக்குள் உள்ள 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகள் மூடப்பட்ட நிலையில் மீதமுள்ள 143 கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் மது பாட்டிலை திரும்ப பெற வேண்டும் என்ற உத்தரவு தங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிக்க : “ராஜினாமா எம்எல்ஏக்களை சேர்ப்பது தவெக-வின் நற்பெயரைக் கெடுக்கும்”.. எச்சரித்த திருமாவளவன்!!
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த காரணத்தால் மது பிரியர்கள் கவலை அடைந்தனர். இதனால் தனியார் மது கடைகளில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.