மதுரையில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்.. ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலி, 41 பேர் படுகாயம்!!
மதுரை கொட்டாம்பட்டி அருகே ஆம்னி பேருந்தும் அரசுப் பேருந்தும் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் இருந்து மார்த்தாண்டம் சென்ற ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி, எதிரே வந்த அரசு பேருந்து மற்றும் பயணிகள் நிழற்குடை மீது மோதி விபத்துக்குள்ளாது.
மதுரை, ஜூலை 13: மதுரை அருகே அரசுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 41 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் கிராமத்தின் நான்கு வழிச்சாலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, அதிகாலை நேரத்தில் இரு பேருந்துகளும் அதிவேகத்தில் வந்துகொண்டிருந்தபோது இவ்விபத்து நேரிட்டுள்ளது.
இதையும் படிக்க : எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து:
சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. வஞ்சிநகரம் கிராமம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசைச் சாலைக்கு பாய்ந்த ஆம்னி பேருந்து, மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
நிழற்குடை இடிந்து தரைமட்டம்:
அரசுப் பேருந்து மீது மோதிய வேகத்தில், அந்த தனியார் ஆம்னி பேருந்து மீண்டும் இடதுபுறமாகத் திரும்பி, வஞ்சிநகரம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த ‘பயணிகள் நிழற்குடை’ மீது பலமாக மோதியது. இந்த கடுமையான மோதலில் அந்த நிழற்குடை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகிச் சேதமடைந்தது.
உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்தவர்கள் விவரம்:
இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த கோர விபத்தில், இரு பேருந்துகளின் முன்பகுதிகளும் முற்றிலுமாக நொறுங்கின. இதில், பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்துகளில் இருந்த 41 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொட்டாம்பட்டி காவல்துறையினரும், பொதுமக்களும் காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க : “நான் ஓடி ஒளிந்தேனா”.. மருத்துவ ஆவணங்கள், விமான டிக்கெட்டுகளைக் காட்டி எ.வ.வேலு ஆக்ரோஷம்!
போலீசார் விசாரணை, போக்குவரத்து பாதிப்பு:
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அனைவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால், ஓட்டுநர் தூங்கியதால் விபத்து நேர்ந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. விபத்து நடந்த நெடுஞ்சாலை பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.