தமிழகத்தில் குறையும் மழை, அதிகரிக்கும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் மழையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 4° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tamilnadu Weather Today: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மழையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இந்த வானிலை மாற்றம் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வறண்ட வானிலை மற்றும் வெப்பநிலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்ப்பதும், போதிய அளவு நீர் அருந்துவதும் நலம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Also Read: “கதறவிடப்போகும் வெயில்!”.. அடுத்த 4 நாட்களுக்கு இதுதான் நிலவரம்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
இன்று மழைக்கு வாய்ப்பு:
வெப்பநிலை ஒருபுறம் உயர்ந்தாலும், காற்றழுத்த தாழ்வு பாதையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று (ஜூலை 13) பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, ஜூலை 14 முதல் ஜூலை 18 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். இருப்பினும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை முன்னறிவிப்பு:
மழையின் அளவு குறைவதால், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு (ஜூலை 13 முதல் ஜூலை 16ம் தேதி வரை) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக கடலோர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிக வெப்பநிலையும், காற்றில் அதிக ஈரப்பதமும் கலந்திருக்கும் என்பதால், மக்களுக்கு ஒருவிதமான உடல் அசௌகரியம் (புழுக்கம் மற்றும் சோர்வு) ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையிலும் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல்: ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
இதையும் படிக்க : மாறப் போகிறது சென்னையின் முகம்… மாறப்போகும் முக்கிய இடங்கள்…
வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதி: அந்தமான் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 12 முதல் 15 வரை மணிக்கு 40 முதல் 55 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 60 முதல் 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, வானிலை மையம் குறிப்பிட்டுள்ள தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.