நாங்கள் திமுகவுடன் நட்போடு தான் இருக்கிறோம் – அமைச்சர் வன்னி அரசு விளக்கம்
விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி 5 ஆண்டுகள் எந்த தடையும் இல்லாமல் செயல்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் யாருடனும் பகை பாராட்டாது. நாங்கள் திமுக தோழர்களுடன் நட்போடு தான் இருக்கிறோம் என்றார்.
கோவில்பட்டி, ஜூலை 12 : விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி 5 ஆண்டுகள் எந்த தடையும் இல்லாமல் செயல்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஜூலை 12, 2026 தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவுடனான நட்பு என்பது வேறு, அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. இரண்டுக்கும் சம்பந்தமில்லை என ஏற்கனவே திருமாவளவன் தெளிவாக விளக்கமளித்து விட்டார். விடுதலைச் சிறுத்தைகள் யாருடனும் பகை பாராட்டாது. நாங்கள் திமுக தோழர்களுடன் நட்போடு தான் இருக்கிறோம். சமூக விரோத கருத்துக்கள், மக்களை பிரிக்கின்ற கொள்கைகளைக் கொண்டிருப்பதால் தான் பாஜகவை எதிர்க்கிறோம் என்று பேசினார்.
திமுகவுடன் நட்போடு இருப்பதாக அமைச்சர் வன்னி அரசு விளக்கம்
மேலும் பேசிய அவர், திமுக, தவெக இணைய வேண்டும் என பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் இருந்து தான் திருமாவளவன் பேசியிருக்கிறார். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காகவே இந்தியா கூட்டணியில் திமுக, தவெக ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறோம். தவெகவை எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் திமுக, அதிமுக இணைய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சொல்கிறார். அதனை யாரும் ஏற்க மாட்டார்கள்.
இதையும் படிக்க : எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு




அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடு. தவெக அமைச்சரவையில் குற்றப்பின்னனி கொண்டவர்கள் யாரும் இல்லை. வழக்குகள் இருக்கலாம். அது அரசியல் ரீதியாக இருக்கலாம். என் மேல் கூட வழக்கு உள்ளது. வழக்கு பதிவு செய்தாலே குற்றவாளி என கூறிவிட முடியாது. நீதிமன்றத்தில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகு தான் அதைப்பற்றி விவாதிக்க முடியும்.
விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் முதல்வர் விஜய்யின் தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் எந்த தடையும், பிரச்னையும் இல்லாமல் மக்களுக்கான ஆட்சியாக தொடரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் தொடர்பாக திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு மேலும் 9 மாத கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆணவ படுகொலைக்கான தனிச்சட்டம் விரைவில் அறிவிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியா அல்லது தவெக கூட்டணியா என்பது குறித்து திருமாவளவன் தலைமையிலான விசிக மேல்மட்ட குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : “நான் ஓடி ஒளிந்தேனா”.. மருத்துவ ஆவணங்கள், விமான டிக்கெட்டுகளைக் காட்டி எ.வ.வேலு ஆக்ரோஷம்!
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சமூக விடுதிகள் எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ? அதை கண்டறிந்து விடுதிகள் கட்டப்படும். இந்த கல்வி ஆண்டிலும் இடம் கிடைக்காதவர்களுக்கு கூட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாநில உரிமைகளை பேசக் கூடிய கட்சிகளை முதலில் அழித்து ஒழிப்பதே பாஜகவின் இலக்கு. பீகாரில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த நிதிஷ்குமார் கட்சி, சிவசேனா கட்சி என்ன நிலையில் இருக்கிறது? எல்லாவற்றையும் இரண்டாக, மூன்றாக உடைத்து சிதறடிப்பது தான் அவர்கள் வேலை. தமிழகத்தில் அதிமுகவை அப்படித்தான் அவர்கள் செய்துள்ளனர். பாஜக உடன் கூட்டணி வைத்த எந்த கட்சியும் உருப்பட்டதாக எந்த வரலாறும் இல்லை என்றார்.